.
அமெரிக்காவின் தற்காலிக பொருளாதார தடை தளர்வைப் பயன்படுத்தி, தனது நட்பு நாடான சீனாவுக்கு சுமார் 7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை, ஈரான் ரகசியமாக ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின்படி, ஜூன் பாதியிலிருந்து ஜூலை பாதி வரை 1 மாதத்திற்கு அமெரிக்கா விதித்த கடல்வழித் தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஈரான் சுமார் 5 முதல் 6 பில்லியன் டாலர் (அதாவது சுமார் ரூ.50,000 கோடி) வருவாய் ஈட்டியுள்ளதாக அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, ஈரானிய கப்பல் போக்குவரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கிய பின்னர், ஜூன் மாத இறுதியில் சுமார் 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மலேசியாவின் கிழக்குக் கடற்கரைக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அங்கு நடுக்கடலில் பெரிய குழாய்கள் மூலம் ஈரானிய கப்பல்களில் இருந்து வேறு சில கப்பல்களுக்கு கச்சா எண்ணெய் ரகசியமாக மாற்றப்பட்டது. அங்கிருந்து இந்த எண்ணெய் சீனாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் ஏறத்தாழ 70 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை சீனாவிற்கு, ஈரான் ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மீண்டும் தனது கடல்வழித் தடைகளை ஜூலை 14 முதல் அமல்படுத்தியதற்குள், இந்த 6 பில்லியன் டாலர் வருவாய் ஈரானுக்கு ஒரு முக்கிய பொருளாதார வாழ்வாதாரமாக மாறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



