உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ நகரம் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் சக்திவாய்ந்த ரேடார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மெக்சிகோ நகரம் வேகமாக மூழ்கி வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சுமார் 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நகரத்தின் குடிநீர் தேவையில் 60% ஒரு பழமையான நிலத்தடி நீர் தடாகத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதிகப்படியான நீர் உறிஞ்சப்படுவதால், நிலப்பரப்பு உள்வாங்கத் தொடங்கியுள்ளது. மற்றும்களிமண் நிறைந்த மண்ணின் மீது அமைக்கப்பட்டுள்ள கனரக உள்கட்டமைப்புகள் மற்றும் கட்டிடங்களின் எடை நிலச்சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள் தரவுகளின்படி, கடந்த 2025 அக்டோபர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் சில பகுதிகள் ஆண்டுக்கு சுமார் 9.5 அங்குல வேகத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீதிகள் பிளவடைதல், கட்டிடங்கள் சரிதல் மற்றும் ரயில் போக்குவரத்து கட்டமைப்புகள் பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பெனிட்டோ ஜுவாரஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரின் முக்கிய அடையாளமான ‘சுதந்திர தேவதை’ நினைவுச் சின்னம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
மேலும் 1910 இல் கட்டப்பட்ட சுதந்திர தேவதை நினைவுச் சின்னத்தின் தரைபகுதி மூழ்கியதன் காரணமாக சிலையின் கீழ்பகுதியில் இதுவரை 14 கூடுதல் படிக்கட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை தொடர்ந்தால், மெக்சிகோ நகரம் ‘டே நகரம் – நீர் திவால்நிலை ‘ எனப்படும் குடிநீரே இல்லாத நிலையை விரைவில் எட்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.




