பிரேசிலில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்து: பிரபல அமெரிக்க பொப் பாடகர் ஆலிவர் ட்ரீ உட்பட 6 பேர் உடல் கருகி பலி!

 

பிரேசிலில் இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், புகழ்பெற்ற அமெரிக்க ஆல்ட்- பொப் பாடகரும் இணைய ஆளுமையுமான ஆலிவர் ட்ரீ உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (14) காலை ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகொப்டர்களும், அங்கிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளன.

விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகொப்டரில் ஒரு பிரேசிலிய இசைத் தயாரிப்பாளர், அர்ஜென்டினாவின் வீடியோ இயக்குனர், மற்றும் ‘காஸ்பி’ என்று அழைக்கப்படும் பிரபல அர்ஜென்டினா யூடியூபர் காஸ்பர் பிரிம் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். மற்றொரு ஹெலிகொப்டரில் பைலட் மட்டும் இருந்துள்ளார். இரண்டு ஹெலிகொப்டர்களிலும் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

“பயணிகள் பட்டியலில் 32 வயதான ஆலிவர் ட்ரீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், விபத்தில் உடல்கள் மிக மோசமாகக் கருகியுள்ளதால், மரபணு பரிசோதனைக்கு பின்னரே உடல்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.” என பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் அங்கிருந்த சுமார் 20 மின்சார கார்கள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்துள்ளன.

எலக்ட்ரிக் கார்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் தீப்பற்றும்போது அதிக நச்சு வாயுக்களை வெளியிடுவதுடன், வெப்பத்தின் தீவிரத்தையும் அதிகரிக்கும்.

இந்த வகை வாகனங்களின் தீயை அணைக்க சாதாரண கார்களை விட 3 முதல் 4 மடங்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததால், பெரும் பேராபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விசித்திரமான ‘பவுல் கட்’ தலைமுடி, வினோதமான உடைகள் மற்றும் இணையத்தில் எப்போதும் நெட்டிசன்களை வம்புக்கு இழுக்கும் குறும்புக்காரராக ஆலிவர் ட்ரீ (32) உலகப் புகழ் பெற்றவர். ‘Life Goes On’, ‘Miss You’ போன்ற அவரது பாடல்கள் ஸ்பாட்டிபையில் 700 மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் கேட்கப்பட்டுள்ளன.

அவர் தனது மியூசிக் வீடியோக்களில் ஆபத்தான ஸ்டண்ட்களையும், பல போலி மரண நாடகங்களையும் முன்பு செய்துள்ளதால், இந்த ஹெலிகாப்டர் விபத்துச் செய்தியும் அவரது புதிய விளம்பர உத்திகளில் ஒன்றாக இருக்குமோ என அவரது 11 மில்லியன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். ஆனால், அவர் தனது உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 6 அன்று சாவ் பாலோவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரேசிலில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பிரேசிலில் விமான விபத்துகள் பொதுவானதாக மாறி வரும் நிலையில், வானூர்தி விபத்துகள் புலனாய்வு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரை 84 வான்வழி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.