ஜே .வி.பி.தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார்.அப்படியானால் பிரபாகரன் கொல்லப்பட்ட்டபோது மட்டும் ஏன் அவரின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்படவேண்டும். யுத்தக்காலத்தில் அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமிழ் பத்திரிகையில் ”தினக்குரல்” புதன்கிழமை வெளியான செய்தியை சபைக்கு காட்டி. மேலும் உரையாற்றுகையில், ”பிரபாகரனின் மகன் படுகொலை; சனல் 4 ஆவணப்படம் பொய்கூறுகிறது. பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிராகரிக்கின்றது” என்று இந்தப்பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது சனல் 4 ஊடகம் வெளியிடும் ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பான விடயங்கள் உள்ளன. பாலச்சந்திரன் தொடர்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. முதலில் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருப்பதை போன்ற படம் உள்ளதுடன், அடுத்த படத்தில் அவரின் உடல் துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளுடன் கிடக்கும் படம் உள்ளது.
எவ்வாறாயினும் பயங்கரவாதியின் மகனாக இருந்தாலும் இவ்வாறு நடக்கக்கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை. அவரின் குடும்பத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியது. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமது முன்னாள் தலைவரை மறந்துவிட்டது.
அத்துடன் சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார். அவ்வாறானால் ஏன் பிரபாகரனின் மகன் மட்டும் கொல்லப்பட்டார்? அவருக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடந்தது?இது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? உண்மையில் போர்க் காலத்தில் பிரபாகரின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.




