பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை-40 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றம்

 

அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், 40 ஆண்டுகளுக்குப் பின் “குற்றவாளி” என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை 6 மணியளவில் குற்றவாளிக்கு (வயது 74) விஷ ஊசி செலுத்தப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, விஷ ஊசி செலுத்தப்பட்டு, ஓரிரு நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளின்போது கண்டறியப்பட்டதாவது,

1982ஆம் ஆண்டு அமெரிக்காவில் போர்ட் லாடர்டேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண்ணான பேட்ரீசியா பேட்டி கிப்போர்ட்டு (அன்றைய வயது 18) புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தோழியுடன் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஹொலிவுட் பகுதியருகில் உள்ள ஹோட்டலில் விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது நீச்சல் குள பராமரிப்பாளராக பணியில் இருந்த, இவ்வழக்கின் குற்றவாளியான டென்னிஸ் சொச்சோர் மற்றும் அவரது சகோதரரின் வாகனத்தில், கிப்போர்ட்டு தனது தோழியுடன் சில மணிநேரம் அமர்ந்து பேசியுள்ளார்.

அப்போது தோழிக்கு உடல்நலன் பாதிக்கப்படவே, அவர் ஓய்வெடுப்பதற்காக தனது காருக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர், கிப்போர்ட்டு அமர்ந்திருந்த வாகனத்தில் சொச்சோர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மாத்திரமே இருந்துள்ளனர்.

அப்போது “உணவு வாங்கச் செல்வோம்” என்று கூறி, தனது வாகனத்தில் கிப்போர்ட்டை அந்த இரவு வேளையில் சொச்சோர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மனித நடமாட்டம் இல்லாத இடமொன்றில், வாகனத்தை நிறுத்தி, கிப்போர்ட்டை, சொச்சோர் பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கிக் கொன்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் உடனிருந்த சொச்சோரின் சகோதரரான கேரி சொச்சோர் விசாரணையின்போது கூறுகையில், மது போதையில் பயந்து போயிருந்தேன். இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

அத்தோடு, கேரி சொச்சோர் இந்த வழக்கில் உட்சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெண் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சொச்சோர், 1987இல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்த பின்னர், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.