வெனிசுலாவில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் போது, அது தாக்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளது. 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்வதற்கு முன்பே, கூகுள் அதை எப்படி கணித்தது என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு பின்னால் இருப்பது உலகெங்கும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பிரம்மாண்ட வலைப்பின்னல் ஆகும். ஒவ்வொரு போனிலும் இருக்கும் Accelerometer சென்சார், நிலநடுக்கத்தின் போது முதலில் வெளிவரும் அதிர்வு அலைகளான ‘பி-அலைகளை’ உடனடியாக கண்டறிகிறது. இந்த அலைகள் ஆபத்தில்லாதவை, ஆனால் அடுத்து வரும் பேரழிவை ஏற்படுத்தும் ‘எஸ்-அலைகளை’ விட வேகமாக பயணிக்கக்கூடியவை.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பல போன்கள் ஒரே நேரத்தில் இந்த அதிர்வுகளை உணர்ந்து, ஒளியின் வேகத்தில் கூகுள் சர்வர்களுக்கு தகவல்களை அனுப்புகின்றன. இந்த தரவுகளை கொண்டு கூகுள் சர்வர்கள் நிலநடுக்கத்தை நொடிப்பொழுதில் உறுதி செய்து, ஆபத்து வரவிருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு Be Aware அல்லது ‘டேக் ஆக்ஷன்’ Take Action போன்ற எச்சரிக்கை விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. நிலநடுக்க அலைகளின் வேகத்தை விட, மொபைல் சிக்னல் பயணிக்கும் ஒளியின் வேகம் பல மடங்கு அதிகம் என்பதால், மக்கள் சுதாரித்துக் கொள்ள சில நொடிகள் அவகாசம் கிடைக்கிறது.



