தைவான் நடத்திய அதிரடி ராக்கெட் சோதனை!அடுத்த போருக்கு தயாரா?

 

சீனாவின் சாத்தியமான ராணுவ ஊடுருவலை முறியடிக்கும் நோக்கில், தைவான் தனது மேற்கு கடற்கரைப் பகுதியில் அதிநவீன ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவி பிரம்மாண்ட போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. தைவானை தனது சொந்த எல்லை என்று உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபகாலமாக தைவான் நீரிணைப் பகுதியில் தினசரி அடிப்படையில் போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் அனுப்பி அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ராணுவப் பயிற்சியில், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தயாரிப்பான ‘ஹைமார்ஸ்’ (HIMARS) மொபைல் ராக்கெட் அமைப்புகள் முதன்முறையாக தைவானின் மேற்கு கடற்கரையான தைச்சுங் (Taichung) பகுதியில் பயன்படுத்தப்பட்டன. எதிரி ரேடார்களின் பார்வையில் படாமல் தப்பிக்கும் ‘சூட் அண்ட் ஸ்கூட்’ (Shoot-and-scoot) அதாவது, இலக்கைத் தாக்கிவிட்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு நகரும் உத்தியை தைவான் ராணுவம் இதில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.

சுமார் 20 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் சேற்றுப் பகுதிகளில் இந்த பயிற்சி ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் ஹைமார்ஸ் ராக்கெட்டுகளுடன் சேர்த்து, தைவானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘தண்டர்போல்ட்-2000’ (Thunderbolt-2000) ரக மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்களும் பயன்படுத்தப்பட்டு எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ‘கில் ஜோன்’ (Kill Zone) உருவாக்கப்பட்டது. சுமார் 300 கி.மீ தூரம் வரை பாய்ந்து செல்லும் இந்த ஏவுகணைகள் மூலம் சீனாவின் கடலோரப் பகுதிகளைக் கூட தைவானால் துல்லியமாகத் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான திட்டமிடப்பட்ட ராணுவப் பயிற்சிகளைப் போலன்றி, இந்த முறை மிகக் குறுகிய கால அவகாசத்தில், அதாவது ஒரே ஒரு நாளைக்கு முன்புதான் ராணுவ வீரர்கள் இந்த இலக்கு பகுதிக்கு வந்து துரிதமாகப் பயிற்சியைத் தொடங்கினர். இதன் மூலம், சீனா திடீரென தாக்குதல் நடத்தினால் எந்த நேரத்திலும் மிக வேகமாகப் பதிலடி கொடுக்க தைவான் ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதை உலகிற்கு இந்த ராணுவப் பயிற்சி உணர்த்தியுள்ளது.