திடீர் காது கேளாமை சிகிச்சை

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் ஆறாவது விரலாக பாவிக்கும் செல்போன் எனும் இலத்திரனியல் சாதனங்களின் வழியாக தொடர்ச்சியாக பாடல்கள் – இசை-  உரையாடல்கள் ஆகியவற்றை கேட்கிறார்கள்.
இதன் ஒலி அளவு குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாக பாதிப்பதால் சிலருக்கு இதன் காரணமாகவும் திடீர் காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
அத்துடன் திடீர் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டால்… அதற்கு நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இயல்பான அளவை விட கூடுதல் ஒலியுடன் கூடிய சத்தத்தின் காரணமாக உள் காது பகுதியில் உள்ள மென்மையான முடி செல்கள் சேதம் அடைந்து திடீர் காது கேளாமை பாதிப்பை உண்டாக்கும்.
வேறு சிலருக்கு வைரஸ் தொற்றுகள், காது மெழுகு அடைப்பு, மூச்சு குழாய் மற்றும் சைனஸ் தொற்று, உள் காதில் ஏற்பட்டிருக்கும் குருதி ஓட்ட தடை அல்லது நரம்பு சேதம், தொடர்ச்சியாக பாவிக்கும் சில மருந்தியல் சிகிச்சையின் பக்க விளைவு ஆகிய பல காரணங்களால் திடீரென்று காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும்.Medical Literature & Resources
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அருகில் இருக்கும்  வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். திடீர் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டால் வைத்தியர்கள் பெரும்பாலும் ஸ்டீராய்ட் மருந்தியல் சிகிச்சை மூலம் உடனடியாக நிவாரணத்தை வழங்குவர்.
சிலருக்கு தற்போது இன்ட்ராடம்பேனிக் ஸ்டீராய்டு இன்ஜெக்சன் எனும் பக்க விளைவுகளை அதிகம் ஏற்படுத்தாத நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.