செம்மணியில் 394 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு

 

394 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, இலங்கையில் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி மனிதப் புதைகுழி விளங்குகின்றது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 7 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வின் 29 ஆவது நாளான நேற்றுமுன்தினம் (19) புதிதாக 7 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள துடன் இதுவரை மொத்தமாக 394 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில், 394 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 370 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் யாழ் பல்கலைக்கழக இரண்டாம் வருட தொல்லியல் துறை மாணவர்களும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.