சிவன் கோயிலில் குண்டுவெடிப்பு இரு சீனர்களுக்கு மரண தண்டனை!

 

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த இரு சீனர்களுக்குத் தாய்லாந்து நீதிமன்றம் இன்று அதிரடியாக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பாங்காக் தெற்கு குற்றவியல் நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் உலுக்கிய இந்த கோரச் சம்பவத்திற்குத் தகுந்த நீதி கிடைத்துள்ளதாகப் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று பாங்காக்கின் மையப்பகுதியில் உள்ள, வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் கூடும் புகழ்பெற்ற ‘எரவான் இந்து சிவன் கோயிலில்’ (Erawan Shrine) இந்த கொடூரக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ‘பைப் பாம்’ வெடித்துச் சிதறியதில் பிரிட்டிஷ் பெண், 7 சீனப் பயணிகள் உட்பட மொத்தம் 20 அப்பாவிப் பொது மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாகச் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ‘யுசுபு மியரைலி’ (Yusufu Mieraili) மற்றும் ‘பிலால் முகமது’ (Bilal Mohammed) ஆகிய இரு உய்கர் (Uyghur) இனத்தைச் சேர்ந்த சீனர்களைத் தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பிலால் முகமது கோயிலின் பெஞ்ச் அடியில் வெடிகுண்டு அடங்கிய பையை வைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து மியரைலி அந்த குண்டை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததாகவும் சிசிடிவி மற்றும் கைரேகை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது .

தாய்லாந்து அரசு தங்களைச் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகக் கைதிகள் தரப்பில் வாதிடப்பட்ட போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. மனிதநேயமற்ற இந்த கொடூரக் குற்றத்திற்குச் சட்டப்படியான மிக உயர்ந்த தண்டனையான ‘மரண தண்டனையே’ பொருத்தமானது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கைதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.