உறைபனி ஏரியில் கவிழ்ந்த சுற்றுலா மிதவை ஊர்தி; 5 பேர் உடல்கள் மீட்பு – பேராசையால் நேர்ந்த சோகம்!

 

ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான பைக்கால் ஏரியின் (Lake Baikal) கிழக்குக் கரைப் பகுதியில் நேற்று (மே 19, 2026) இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோ பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர், ஏரியின் அழகைக் ரசிப்பதற்காக ‘செவெர்-750’ (Sever-750) ரக ஏர்போட் எனப்படும் மிதவை ஊர்தியில் பயணித்துள்ளனர். ஏரியின் புகழ்பெற்ற ‘ஆமைப் பாறை’ (Turtle Rock) பகுதிக்கு அருகே சென்றபோது, அந்த ஊர்தி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பனிக்கட்டி மிதக்கும் குளிர்ந்த நீரில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

விபத்து நடந்த சமயத்தில் அந்த ஊர்தியில் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 18 பேர் இருந்துள்ளனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் ரஷ்ய அவசரக்கால மீட்பு அமைச்சகத்தின் (Ministry of Emergency Situations) அதிவிரைவுக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு சிறுவன் உட்பட 13 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், கடுமையான உறைபனி நீரில் மூழ்கியதால் 4 பெண்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர விபத்துக்கு ஊர்தியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான நபர்களை ஏற்றியதே (Overloading) முதன்மைக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான மிதவை ஊர்தி அதிகபட்சமாக 10 பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், சுற்றுலா நிறுவனத்தின் பேராசை காரணமாக 18 பயணிகளுடன் கனரக உள்கட்டமைப்பு உபகரணங்களும் அதில் ஏற்றப்பட்டதால், கடலோரப் பகுதியின் மெல்லிய பனிக்கட்டிப் பாதையைக் கடக்கும்போது ஊர்தியின் சமநிலை சீர்குலைந்து கவிழ்ந்துள்ளது என அவசரச் சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் பைக்கால் ஏரி முழுமையாக உறைந்து தடிமனான பனிக்கட்டியாக மாறும் என்பதால், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிவது வழக்கம். தற்போது மே மாதம் என்பதால் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கும் வேளையில், ஆபத்தான சூழலை உணராமல் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ரஷ்யாவின் மிக உயரிய புலனாய்வு அமைப்பான ‘இன்வெஸ்டிகேட்டிவ் கமிட்டி’ (Investigative Committee) சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் மீது குற்றவியல் வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.