மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டாக சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியது. இதனால்,எரிப்பொருள் பற்றாக்குறையால் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அந்த நேரத்தில் பல்வேறு திசைகளில் ஏவுகணைகள் பறந்துகொண்டிருந்தன. அதனால் எந்த ஏவுகணை பள்ளியை தாக்கியது, அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து உறுதியான முடிவுக்கு வருவது சிரமமாக இருக்கிறது. தாக்குதலில் நடந்தது மிகவும் துயரமான சம்பவம். ஆனால் அதற்கான உண்மையை கண்டுபிடிப்பது எளிதல்ல என்றார்.
மேலும் “அது அமெரிக்க ஏவுகணை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு காரணம் என்று நம்புவதற்கு எந்த தகவலும் என்னிடம் இல்லை” என்று கூறி மறுப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்கிய முதல் நாளிலேயே இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. ஈரான் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, அந்த பள்ளி மீது விழுந்த ஏவுகணை தாக்குதலில் 175-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மார்ச் மாதத்தில் வெளியிட்ட தகவலில், அமெரிக்க ராணுவத்தின் ஆரம்பகட்ட உள்துறை விசாரணையில் தாக்குதலுக்கு அமெரிக்க படைகளின் நடவடிக்கையே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு பழைய இலக்கு தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, திட்டமிட்டு ஒரு பள்ளியை தாக்குவது போர்க்குற்றமாக கருதப்படும். எனினும், பள்ளியை குறிவைத்து தாக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகமும் கடும் கவலை தெரிவித்துள்ளது. “மிகவும் பயங்கரமான சம்பவம்” என அது கண்டனம் வெளியிட்டது. இதற்கிடையில், விசாரணை முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்றும், பள்ளி மீது யாரும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



