இந்தியா – இஸ்ரேல் இடையிலான நட்பின் அடையாளமாக இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிரம்மாண்ட சிலையை நிறுவ அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மும்பைக்கான இஸ்ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாச் நேற்று கூறும்போது, ‘‘சிவாஜி மகராஜ் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இஸ்ரேலின் பெரிய நகரங்களில் ஒன்றில் சிவாஜி மகராஜ் சிலை நிறுவப்படும், இந்தத் திட்டம் இரு நாட்டு மக்களையும் நீண்டகால நோக்கில் ஒன்றிணைக்கும்.
சிவாஜியின் வரலாற்றுப் பெருமைக்குத் தகுந்தவாறு வடிவமைப்பு மற்றும் வரலாற்றுச் சான்றுகளைப் பெற மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவுக்கும், இன்று இஸ்ரேலிய சமூகத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் இந்திய – யூத சமூகத்துக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளின் அடையாளமாக இச்சிலை விளங்கும். இஸ்ரேல் மக்களிடையே சிவாஜி மகராஜின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நட்புறவு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இத்திட்டத்துக்கு மாநில அரசு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.




