அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசோனாவின்யுமா செக்டார் பகுதியில் எல்லை ரோந்துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்மேட்’ என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த 52 பேரை கைது செய்தனர். இதில் 36 பேர் கனரக லாரிகளை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது. கைதான ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களிடம் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன், வர்ஜீனியா போன்ற மாகாணங்களின் வணிக ரீதியிலான ஓட்டுநர் உரிமங்கள் இருந்தன. சிலரிடம் எந்தவிதமான ஓட்டுநர் உரிமமும் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது பெற்ற வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை வைத்திருந்தனர். ஆனால் அவை தற்போது காலாவதியாகிவிட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் பெடரல் சட்டத்தின்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நாடு கடத்தப்பட உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “அமெரிக்காவில் வணிகரீதியிலான வாகனங்களை இயக்கும் சட்டவிரோத நபர்களை கண்டறிந்து கைது செய்வதன் மூலமும், குடியுரிமை சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதே ‘ஆபரேஷன் செக்மேட்’ நடவடிக்கையின் நோக்கமாகும். பொதுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும், சட்டவிரோத ஓட்டுநர்களிடம் இருந்து சமூகத்தையும் சாலைகளையும் பாதுகாப்பதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பை ‘ஆபரேஷன் செக்மேட்’ பிரதிபலிக்கிறது’’ என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் யுமா செக்டார் தலைமை அதிகாரி டஸ்டின் காடில் தெரிவித்துள்ளார்.




