பாக். படைகள் திடீர் தாக்குதல்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 6 பொதுமக்கள் பலி

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலகோட் பகுதியில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. நகரின் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே மோதல்கள் ஏற்பட்டன. அப்போது பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதுபதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்கள்,

பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தொடர்ந்து வரும் முறையான சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் நிர்வாக ரீதியான ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவாகும். உள்ளூர் மக்களின் நியாயமான குறைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அரசு கடுமையான காவல் துறை அடக்குமுறையைக் கையாண்டுள்ளது.

இதில் உதவியற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைத் தடுத்தல், இணையச் சேவையை முடக்குதல் மற்றும் ஆயுதமற்ற பொதுமக்கள் மீது கொடிய வன்முறையைப் பிரயோகித்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியது ஆகியவை அடங்கும். பொதுமக்கள் மீதான இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தானை சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்’ என்றார்.