நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குழுக்களை நியமித்து, கீழ்நிலை ஊழியர் ஒருவர் மூலம் பழியைத் தீர்த்துவிட்டு அமைச்சர் தப்பிக்க முயன்றால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு முன் இருந்த 76 ஆண்டு கால சாபம் தற்போது 78 ஆண்டு கால சாபமாக மாறியுள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை நெருக்கடி நிலைமையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் பார்க்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர், இந்த நாட்டுக்கு அதுவரை நிலவிய அரசியல் ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும், மக்களுக்கு பொறுப்புக்கூறாத நிர்வாகம் என்றும் அவர்கள் கூறினார்கள். மகர சிறைச்சாலை மோதல் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், குழுக்களையோ அல்லது ஆணைக்குழுக்களையோ நியமிப்பது உண்மைகளை மூடிமறைக்கவே என்றும், அரசாங்கம் பொறுப்பேற்று பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அதுவே உன்னதமான அரசியல் கலாசாரம் என்றும் அவர்கள் அன்று கூறினார்கள்.
விசாரணைக் குழுக்களை நியமித்து கீழ்நிலை அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வது பழைய அரசியல் கலாசாரமாகும். எனவே, தங்களின் முன்னால் இருப்பது அவர்கள் விமர்சித்த அதே 76 ஆண்டு கால அரசியல் கலாசாரம்தானா, அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்களா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலும் குழுக்களை நியமித்து, கீழ்நிலை ஊழியர் மூலம் பழியைத் தீர்த்துவிட்டு அமைச்சர் தப்பிக்க முயன்றால், அந்த 76 ஆண்டு சாபம் தற்போது 78 ஆண்டு சாபமாக மாறியுள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
சிறைச்சாலைகளில் காலை உணவு கொண்டு சென்றவர்கள் தொடர்பான உள்நாட்டு தகவல்கள் எனக்கு முழுமையாகத் தெரியாதுவிடினும், பொதுவாக நமது சிறைச்சாலைகளில் 12000 பேருக்கான வசதிகள் மட்டுமே உள்ள நிலையில் 43000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் 33000 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆவர். தண்டனை பெற்ற கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ள சிறைச்சாலை கட்டமைப்பில், பெருமளவிலான விளக்கமறியல் கைதிகளை அடைத்து வைப்பதன் மூலம் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு எலிகள், கரையான்கள், அசுத்தமான நீர் மற்றும் தொற்றுநோய்கள் பரவி மிகவும் மோசமான சூழல் காணப்படுகிறது.
இத்தகைய சுகாதாரமற்ற சூழலில் நோய்கள் பரவுவது இயல்பானதாகும். கொரோனா காலத்தில் மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமையை நாம் கண்டோம். தற்போதைய நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் 40 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 2 குழுக்கள் மோதிக்கொண்டதால் மட்டும் ஒட்டுமொத்த சிறைச்சாலையும் கலவரமாக மாறாது. அங்கு நிலவும் டெங்கு நோய் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பிரச்சினைகளே இதற்கு காரணமாகும் என்றார்.
உயிரிழந்த சிறை அதிகாரிகள் 7 பேரின் பூதவுடலுக்கும் சிறைச்சாலை தலைமையகத்தில் அஞ்சலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்கள், பிரேத பரிசோதனையின் பின்னர் புதன்கிழமை (08) காலை பொரல்லையில் உள்ள சிறைச்சாலை தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டு அரச மரியாதையுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய, பிரிவிடைபெறும் அதிகாரிகளின் பூதவுடலுக்கு அவர்களது குடும்பத்தாரும் சக அதிகாரிகளும் கண்ணீர்மல்கத் அஞ்சலி செலுத்தியிருந்தமை காண்போரைக் கண்கலங்க வைக்கும் காட்சியாக இருதயத்தில் உறைந்தது.
நீர்கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிகாரிகளின் உயிரற்ற தேகங்களை வைக்கப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்ட பேழைகளை, வாகனங்களில் இருந்து இறக்கிய சக அதிகாரிகள் துயருக்கு மத்தியிலும், உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதை அளித்து தமது தோள்களில் தாங்கி வந்திருந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் பூதவுடல்கள் சிறைச்சாலை தலைமையகத்தின் பரிசோதனை மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சார்ஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ, சார்ஜன்ட் பி.என்.என். தரங்க, சார்ஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி, சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச, சார்ஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார, சார்ஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன மற்றும் சார்ஜன்ட் ஏ.டி. தரங்க ஆகிய அதிகாரிகளே மேற்படி மோதலில் உயிர்தியாகம் செய்திருந்தனர்.
புதன்கிழமை (08) சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரமல்லாது, உயிரிழந்த அதிகாரிகளின் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என அவர்களை இழந்து தவிக்கும் இரத்த உறவுகளும் சிறைச்சாலை தலைமையகத்தை நேற்று கண்ணீர்த் துளிகளால் நனையச் செய்திருந்தனர்.
கடமைக்குச் சென்றிருந்த தமது அன்பார்ந்தவர்களை மீண்டும் உயிரற்ற உடல்களாகப் பார்க்க வேண்டிய தருணம் ஏற்படக்கூடும் என கனவிலும் எண்ணவில்லை என்ற உயிரிழந்தோரது உறவுகளின் அழுகுரல்களும் அங்கிருப்போரையும் கண்ணீர்மல்கச் செய்யும் காட்சியாக இருந்தது. பணியிடத்தில் நண்பனாக, சகோதரனாக, தன் குடும்ப உறவைப் போலப் பழகிய சக அதிகாரியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத சக அதிகாரிகளும் வாய்விட்டு கதறி கண்ணீர் வடித்திருந்தனர். பாதுகாப்புத்துறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் குடும்பத்தாரை விடத் தமது பணியிடங்களில் உள்ள அதிகாரிகளுடனேயே அதிக காலத்தைச் செலவிடுகின்றனர்.
சீருடை அணிந்து கடமையில் இருப்போரைக் கம்பீரத்துடன் பார்த்துப் பழகிய பலருக்கும், நேற்றைய தினம் ஒவ்வொரு அதிகாரியும் வெளிப்படுத்தியிருந்த துயரம் மனதைப் பிழியும் வகையில் இருந்தது. இந்நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் சிறைச்சாலை தலைமையகத்துக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். இதன்போது கண்ணீர் வடித்தபடி ஒரு சில சிறை அதிகாரிகள், காலையில் தங்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சக தோழர்கள், மாலையில் சாடலமாக கிடப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என மிகுந்த வேதனையுடன் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.
மேலும், அங்கு நின்ற அந்த அதிகாரி துணிச்சலாகச் செயற்பட்டிருக்காவிட்டால், 15 க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியில் தப்பியிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் ஒட்டுமொத்த அதிகாரிகளினதும், பொதுமக்களினதும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அனைவரையும் காப்பாற்றிய அந்த அதிகாரி ஒரு தேசிய வீரன். அவருக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என சக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகப் பாடநெறிகளையும் கற்று, அதற்கமையவே கைதிகளை நடத்துவதாகவும், அவர்களுக்கு எவ்வித அமானுஷ்யமான கொடுமைகளும் இழைக்கப்படுவதில்லை என்றும், கைதிகளுக்குள் மனிதர்களும் மிருகத்தனமானவர்களும் கலந்தே காணப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.
சிறு பிரச்சினையைத் தான் இவ்வளவு தூரம் வளர்த்துள்ளார்கள். எமக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளையும், முறையான விசேட பயிற்சிகளையும், அதற்கான திட்டங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நாம் எதற்கும் தயாராக இருக்கின்றோம் எனவும் அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் இறுதி அஞ்சலி மரியாதையைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் இறுதிச் கிரியைகளுக்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



