விஜய்க்கு இலங்கையிலிருப்பது இரசிகர்களா, தொண்டர்களா?

நடிகர் விஜய் அரசியல்வாதி விஜயாக  மாறியதிலிருந்து இலங்கையிலிருக்கும் இளம் சமூகத்தினர் தமது விருப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
 அவரை நடிகராக பார்த்ததை விட தமிழகத்தின் முதலமைச்சராக பார்ப்பதிலேயே அனைவரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.
விஜய் தனது படங்களில் வில்லன்களை தூக்கி வீசி அடித்து துவைத்து  ஆக் ஷன் காட்டுவதையும் வீர வசனங்கள் பேசுவதையும் , காதல் காட்சிகளில் தூள் கிளப்புவதையும் அதே வேளை நகைச்சுவை காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைப்பதையும் பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்ட அனைவரும் அவரை முதலமைச்சராக பார்ப்பதற்கு எதற்கு ஆசைப்பட்டார்கள் என்று தெரியவில்லை.
தமிழ் நாடு  தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும் போது  ‘ காமராஜர் தோற்றார் மு.க.ஸ்டாலினும் தோல்வியைத் தழுவியுள்ளார் தமிழ் நாட்டு மக்கள் சமூகம்  இரசிகர் மயமாகியுள்ளதையே இது வெளிப்படுத்துகின்றதுஸஅதே வேளை அரசியல் மயமாகவில்லையென்பது நிரூபணமாகியுள்ளது ‘ என்று கூறியிருந்தார். அதில் உண்மைகள் உள்ளன.
இலங்கையிலும் விஜய் இரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனரா அல்லது அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் அவரை அரசியல்வாதியாக பார்த்தார்களா என்பது குறித்து தெளிவுகள் இல்லை.
ஆனால் க கடந்த 4 ஆம் திகதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் பலரது கவனத்தை ஈர்த்திருந்தன.
குறிப்பாக வடக்கு கிழக்கு  மற்றும் மலையகப்பகுதிகளில்   நடிகர் விஜயின் இரசிகர்கள்இ கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் என்னவெனில்  நடிகர் விஜயை தலைவராகக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தில்  விஜய் மாத்திரமே அனைவருக்கும் அறிமுகமான பிரபல்யமான நபராக விளங்கினார்.
கட்சியில் வெற்றி பெற்ற ஏனைய அனைவரும் 234 தொகுதி மக்களுக்குமே  புதியவர்கள்.  விஜய் என்ற பிம்பத்தை மாத்திரம் தமது மனதில் கொண்டு தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதே யதார்த்தம்.
அதே போன்று தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட வேறு எவரையும் இலங்கை விஜய் இரசிகர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் விஜய் என்ற ஒருவருக்கு மாத்திரமே தமது ஆதரவு என்பது அவர்களது கருத்து.  தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றவுடன் இலங்கையின் வடமாகாணத்தில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள்   பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
 காக்கை தீவு பகுதியில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்ட இளைஞர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
அப்பகுதி வறிய மக்களுக்கு    உலர் உணவுப் பொருட்களையும் விநியோகித்தனர். அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் புசல்லாவை நகரில் ஒன்று திரண்டு விஜய் இரசிகர்கள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து  ஊர்வலமாகச் சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை  மூதூர் பகுதியில் விஜய் இரசிகர்கள் பாற்சோறு சமைத்து அனைவருக்கும் விநியோகித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.Politics
 வாழ்த்துகள்,கருத்துகள்  ஒரு பக்கம் இருக்க, விஜயின் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கு, மலையக இளைஞர்கள் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
தேர்தல் பிரசாரங்களின் போது கச்ச தீவை மீட்போம் என விஜய் கூறியிருந்தார். எமது நாட்டிற்கு சொந்தமான ஒரு பகுதியை கேட்ட விஜய்க்கு எப்படி இங்கிருந்து கொண்டு ஆதரவளிப்பது என விமர்சனங்கள் கிளம்பியிருந்தன.
மாத்திரமின்றி  பெரும்பான்மை ஆசனங்களின்றி ஆட்சியமைக்க முடியாத நிலையிலிருந்து விஜய்க்கு  ஆதரவளிக்க காங்கிரஸ் முன் வந்தமை, அதை விஜய் ஏற்றுக்கொண்ட சம்பவங்களுக்குப் பிறகு எதிர்ப்புகள் வேறு கோணத்தில்  எழுந்தன.
ஈழத்தமிழர்கள் பலர் பலியாக காரணமான  காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைக்கப் போகும் விஜய்க்கு இங்குள்ளவர்கள் ஆதரவாக செயற்பட்டால் அதைவிட துரோச் செயல் இருக்க முடியாது என புலம்பெயர் தமிழர்களால்  சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.
 மலையகத்தின் புசல்லாவை நகரில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களும் விமர்சனங்களை எதிர்நோக்கியிருந்தன.
காவத்தை பகுதியில் தொழிலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மலையகம் மற்றும் தலைநகரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்கள் பங்கு கொண்ட தருணத்தில் இங்கு இவர்களுக்கு என்ன கொண்டாட்டம் வேண்டியுள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.இலங்கை செய்திகள்
 அதற்கு விஜய் இரசிகர்கள்   ‘அவர் எமது விருப்புக்குரிய நடிகர். அவரது படங்கள் இலங்கையில் திரையிடப்படும் போது நாம் எவ்வாறு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோமோ அதே போன்று அவர் தமிழகத்தின் முதலமைச்சராக வெற்றி வாகை சூடப்போவதை கொண்டாடுகின்றோம்.
இதில் எதுவும் தவறுகள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை’ என அவர்கள் தமது பக்க நியாயங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.
சினிமாவில் உச்ச இடத்தில் இருக்கும் போதே தமிழக அரசியல் சூழ்நிலைகளை நன்கு கணித்து வைத்திருந்தார் விஜய். தனது அரசியல் படங்களை பார்க்கும் இரசிகர்களின் நாடித்துடிப்பையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.
அதன் காரணமாகவே கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் (2024–2026) அவரால் தமிழ்நாட்டின் பாரம்பரிய திராவிட கட்சிகளை ஓரங்கட்ட முடிந்தது.
மாத்திரமின்றி 1952 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற 17 சட்டசபை தேர்தல்கள்  வரலாற்றில் முதன் முறையாக 80 வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு இறுதியாக 85 வீதமாக அமைந்தது.
இவை அனைத்துக்கும் காரணம் விஜய் என்ற ஒற்றை மனிதரே என்பது அவரது தமிழக மற்றும் இலங்கை இரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவுள்ளது.
ஆனால் ஒரு தனிமனிதராக, கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் முகங்கொடுத்த தேர்தலில்  234 தொகுதிகளில் 108 தொகுதிகளை வென்ற விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சற்று தடுமாறித்தான் போனார். தமிழக ஆளுநரும் இவ்விடத்தில் சில இழுபறிகளை ஏற்படுத்தினார்.
ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காததால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து, விஜய் முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 11 ஆம் திகதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதே வேளை சட்டசபையின் பெரும்பான்மை ஆதரவை நிருபிக்க தேவை முதல்வர் விஜய்க்கு எழுந்த காரணத்தால் தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ‘நம்பிக்கை வாக்கெடுப்பு  கடந்த  13 ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த விடயமானது விஜயின் அடுத்த ஐந்து வருட ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இதே வேளை இலங்கையிலுள்ள பல விஜய் இரசிகர்கள் ஆர்வம் மிகுதியால்  தேர்தலுக்கு முன்பதாக  சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள  தமிழக வெற்றிக் கழக அலுவலகத்துக்கு விஜயை சந்திக்க சென்றிருந்தனர்.
ஆனால் பொதுவாக கட்சித்தலைவர்கள் தமது அலுவலகத்துக்கு வருவது மிகவும் குறைவாகும். சிலர் அலுவலகம் முன்பு நின்று படங்கள் எடுத்து தமது முகநூலில் போட்டு மகிழ்ந்தனர்.
ஆனால் விஜயை சந்திக்க முடியாது ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். விஜய் நடிகராக இருக்கும் போது எவ்வாறு அவரை சந்திப்பது கடினமோ அவர் தற்போது முதலமைச்சரானவுடன் அவரை சந்திப்பது மிகவும் கடினமான செயல் என்பது முக்கிய விடயம்.
ஏனென்றால் அவர் இப்போது சுமார் ஏழு கோடி பேருக்கு முதலமைச்சர். இதை இலங்கையிலுள்ள விஜய் இரசிகர்கள் புரிந்து கொள்வார்களோ தெரியாது.
 அவர்கள் இன்னும் விஜயை நடிகராக ஆராதிக்கின்றார்களா அல்லது தமிழக முதலமைச்சராக போற்றுகிறார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.