“என்னைப் பார்த்து எல்லாருமே ‘நீயா?’ என்றுதான் கேட்பார்கள். ‘யார் நீ?’ என்று கேட்ட முதல் ஆள் நீதான்,” என்று ‘நீயா?’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பொருத்தமான விஷயம் என்று பார்த்தீர்களா மக்களே?
யூடியூப் மூலமாகக் பிரபலமாகி, “ஏதோ வெட்டிக் கிழிக்கப் போகிறார்” என்று யாழ் மக்கள் கருதி அவருக்கு வாக்களிக்க, அவர் அன்னக்காவடியாக ஆட்டத்துக்குள் வந்தார் அர்ஜுனா எம்.பி. மருத்துவத்தைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது என்பது மக்களுக்குப் பின்னர்தான் புரிந்தது.
ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நீதிபதி
இந்த நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளில், அதே யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னேற்றப்பட்டவர்தான் நீதிபதி இளம்செழியன். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செய்தி ஏதும் இல்லை. இதனால், செய்திகளை உருவாக்க, அதனைப் பரபரப்பாக்க ஒரு நபர் தேவை. அதுதான் இந்த நீதிபதி இளம்செழியன்.
இவர் சும்மா தீர்ப்புச் சொன்னாலே, 24,000 வோல்ட் மின்சாரம் தாக்கியது போல ஊடகங்கள் செய்தி வெளியிடும். ஆரம்பத்தில் இதனை எதிர்த்து வந்த இளம்செழியன், நாள் போகப் போக இதற்கே அடிமையாகி விட்டார். தடாலடியாகத் தீர்ப்புச் சொல்வதும், அது எப்படா இன்டர்நெட்டில் வரும், அதனை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று கண்காணிப்பதில் இவருக்கு ஒரு அலாதிச் சந்தோஷம்.
ஊடகங்களும் இவரை விட்டபாடில்லை. அப்படியே ஏற்றி ஏற்றிச் சென்று பப்பா கொப்பில் (பனை மரத்தில்) ஏற்றி விட்டார்கள். இதனால், தான் ஏதோ ஒரு பெரிய முக்கிய புள்ளி என்றே கருத ஆரம்பித்து விட்டார் இந்த நீதிபதி இளம்செழியன்.
அதிகாரப் போட்டியில் அர்ஜுனா எம்.பி.
இந்த நிலையில் தான் நீதிபதி இளம்செழியனுக்கு வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசை தொற்றிக் கொண்டது. தன்னை எப்படியாவது முதல்வர் ஆக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை அணுகி இவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், “நானும் ரவுடிதான்” என்று ‘எவன்டா சீனுக்குள் நுழையறது?’ என்று அர்ஜுனா எம்.பி. கோபம் அடைந்துள்ளார்.
எங்கே இளம்செழியன் வரவு தன்னைப் பாதித்து விடுமோ என்று அஞ்சும் அர்ஜுனா எம்.பி. தற்போது இளம்செழியனைக் கிழிஸகிழி என்று கிழிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி ஒன்று ஆரம்பித்துள்ளது. “என்னடா யாழ் மக்கள் இந்த அளவு முட்டாளா?” என்று எண்ணத் தோன்றும். ஒரு பக்கம், ஜே.வி.பி.க்கு (JVP) வாக்களித்துத் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுள்ள யாழ் மக்கள், இப்போது அர்ஜுனா மற்றும் இளம்செழியன் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.