உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை
01 Mar,2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு, கடிதம் ஒன்றின் ஊடாக இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்
அதற்கமைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் பெயரிடப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் காவல்துறை சிரேஸ்ட அதிகாரிகளான சிசிர மெண்டிஸ், நிலந்த ஜெயவர்தன, நந்தன முனசிங்க, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னகோன், வசந்த விக்ரமசிங்க, P.L. பெரேரா மற்றும் A.S. லத்தீப் ஆகியோர் அடங்குவர்.
இந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தமது பரிந்துரைகளுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குறித்த கடிதத்தின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.