“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும்.
ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
“எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தனது முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மாவீரன் சிவகுமாரன், தொடக்கிய பணியில் பல்லாயிரக்கணக்கான மைந்தர்கள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள்.
என்னைப் பொறுத்தவரையில், எந்த இயக்கத்திலிருந்து மடிந்தாலும், அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதில் வேறுபாடு காட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
1983ஆம் ஆண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது உணர்வு மிக்க இளையோர் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் இணையும்பொழுது மேலோங்கிய உணர்வும், வெறியும் இருந்ததே ஒழிய, அவர்களால் போராட்ட இயக்கங்களை பகுத்துணரும் அறிவு அவர்களிடம் இருக்கவில்லை.
ஆரார் முந்தி ஏற்றினார்களோ அவர்களுடன் அணி திரண்டார்கள்.
அனைவரையும் வரவேற்ற இந்திய அரசாங்கம், அனைவரையும் தனது கைப்பொம்மைகளாக வைத்துக்கொண்டு பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாக செயற்படுத்தியது. அனைவருக்கும் ஆளாள் தெரியாமல் பயிற்சியை வழங்கியதும் இல்லாமல், ஆயுதங்களையும் வழங்கியது.
இதுபோன்ற சதி வலைக்குள் சிக்குண்ட தலைமைகள், தங்களுக்குள்ளையே குரோதங்களை வளர்த்துக்கொண்டு தேவையற்ற பகைமைகளை வளர்த்துக்கொண்டார்கள்.
அதிகாரப்போட்டி தலைமைத்துவத்தை தக்க வைத்தல், தனித்துவத்தைப் பேணுதல் என்ற அகங்கார போக்கில் தேவையற்ற சதி வலைக்குள் சிக்குண்டு தங்களுக்குள்ளையே அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.
இதன் விளைவாக, பல கனவுகளுடன் எதிரியை அழிக்க வேண்டும் என்று உலா வந்த ஏதும் அறியாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வீணாக மடிந்து போனார்கள்.
ஆனால், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இதனால்தான் நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து வீரச்செல்வங்களையும் நினைவுகூரவேண்டும்.
இதில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அரசே தவிர, எமது தலைவர்கள் அல்ல.
ஆனால், அதன் விளைவு எம்மிடையே பிளவுகளும் வீண் குரோதங்களும் ஆளாளை துரோகி என்பதும் மிஞ்சியதே தவிர வேறொன்றுமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.