ஸ்பெயின் நாட்டில் ராட்சத நரக ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி
08 Jul,2014
ஸ்பெயின் நாட்டின் அலிகாண்ட்டே மாகாணத்தில் மெரினா பைக்சா கடற்கரை பகுதியையொட்டியுள்ள சிறிய நகரமான பெனிட்ரோம் என்ற இடத்தில் ‘டெர்ரா மெடிக்கா’ என்ற பிரபல பொழுதுப் போக்கு பூங்கா உள்ளது.
இங்குள்ள ஒரு ராட்டினம் 360 டிகிரி கோணத்தில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுழலக் கூடியதாகும். நேற்று மதியம் இந்த ராட்சத ராட்டினத்தில் பயணித்த 18 வயது இளைஞர் ‘பாதுகாப்பு பெல்ட்’ செயலிழந்ததால் தலைகுப்புற தவறி விழுந்து, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான நபர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என ஒரு தரப்பினரும், ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்தவர் என அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நிகழ்ந்து, ஒருவர் மண்டை பிளந்து பலியான பிறகும் அந்த பொழுதுப் போக்கு பூங்காவை மூடாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்த நிர்வாகத்தின் அலட்சியத்துக்கு சுற்றுலா பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணமான ராட்டினத்துக்கு உள்ளூர் மொழியில் ‘இன்பெர்னோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘இன்பெர்னோ’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘நரகம்’ என்று பொருள். உல்லாசத்துக்காக நரகத்தில் ஏறி நரகத்துக்கே சென்று சேர்ந்த அந்த வாலிபரின் துயர முடிவு, ‘விதியை யாராலும் வெல்ல முடியாது’ என்று இதைதான் சொல்வார்கள் போலும் என்று சிந்திக்க தூண்டுகிறது.