10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; !
19 Dec,2018
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பள்ளி வளாகத்தில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரி விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சைலோம் பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அதே வளாகத்தில் தங்கும் விடுதியும் உள்ளது. இந்த பள்ளியில் கடலூரைச் சேர்ந்த மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் பள்ளி விடுதியில் உள்ள குடிநீர் குழாயில் தனியாக தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது அந்த பள்ளியில் வேலைபார்க்கும் ஊழியர் ஆல்பர்ட் சவுந்தரராஜன் அந்த மாணவியை தாக்கினார்.
இதில் அந்த மாணவி கீழே மயங்கி விழுந்தார். பின்னர் அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த பகுதிக்கு ஆட்கள் வருவதை பார்த்ததும் ஆல்பர்ட் சவுந்தரராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை பள்ளி ஊழியர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அந்த மாணவி மயக்கம் தெளிந்து நடந்த விவரத்தை கூறினார்.
இதனைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் விசாரணை செய்தனர்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அலுவலக உதவியாளர் ஆல்பர்ட் சவுந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி நேற்று பள்ளிக்கு வந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழிகளிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர், பள்ளி வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பற்றி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்றும், மாணவியை பலாத்காரம் செய்த ஊழியரின் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதியிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பள்ளி ஊழியர் ஆல்பர்ட் சவுந்தரராஜனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளோம்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை கருத்தில்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை முடிந்து வந்த பின்னர் தான் தீவிர விசாரணை நடத்துவோம். அதன் பின்னரே முழு விவரம் தெரியவரும் என்றார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி விசாரணை அறிக்கையை விழுப்புரத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.