..........................
டென்மார்க்கில் இரண்டு பாடசாலைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது யுவதிக்கெதிரான வழக்கு இன்று கொல்பெக் நீதிமன்றில் விசாரணைக்கு வந்துள்ளது.
தனது 15வது வயதில் தான் படித்த பாடசாலைக்கும், இன்னொரு யூத பாடசாலைக்கும் குண்டு வைக்க திட்டமிட்டது தெரிந்து கைது செய்யப்பட்டார்.
சமூக சீர்திருத்த முகாமில் வைக்கப்பட்டாலும் இவருடைய போக்கில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்கிறார்கள் பயங்கரவாத ஆய்வு பிரிவினர்.
இந்த யுவதியின் கதை..
துருக்கி நாடு சென்ற இந்த இளம் டேனிஸ் யுவதி ஆறு மாத காலத்தில் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு குறுங்காலத்தில் ஜிகாத் போரை ஆதரிக்கும் ஒருவராக மனம் மாறியதாகக் கூறப்படுகிறது.
கெலி யுத்தம் என்ற போரை விரும்புவதாக கூறியிருக்கிறார்.
டென்மார்க் நீதிமன்று சந்திக்கும் இளம் குற்றவாளி ஒருவருக்கு எதிரான வழக்கு இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள்கால சிறைத்தண்டனை காத்திருக்கிறது.
இவருக்கு என்ன வயது என்று பார்ப்பதைவிட இவர் செய்யப்புறப்பட்ட ஆபத்தான செயலே பெரிய விடயமாக பார்க்கப்படுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
7.75.000 பேரின் எதிர்காலம் டேனிஸ் ஏற்றுமதித்துறையை சார்ந்தே
டென்மார்க்கில் தற்போது தொழில் செய்து கொண்டிருப்போரில் 7.75.000 பேரின் எதிர்காலம் டேனிஸ் ஏற்றுமதித்துறையை சார்ந்தே நிற்பதாக இன்றைய டேனிஸ் இன்டஸ்ரி கணிப்புக்கள் கூறுகின்றன.
இந்த ஏற்றுமதி பிரிவுகள் யூலன்ட் பகுதியின் மத்திய மேற்குப்பகுதிகளில் அதிகமாகவே காணப்படுகின்றன, ஏற்றுமதிகள் படுத்தால் இவர்களின் எதிர்காலமும் படுக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் 2008 ல் ஆரம்பித்து டென்மார்க்கின் பொருளாதார மந்த நிலைக்கு பின்னதாக வெளிநாட்டு ஏற்றுமதிகளை குறி வைப்பதே பொருளாதார மீட்சிக்கு சிறந்த வழி என்று முடிவுகட்டப்பட்டது.
இதனடிப்படையில் டேனிஸ் ஏற்றுமதிகள் புதிய நாடுகளை சென்றடையும்விதமாக வெளிநாட்டு அமைச்சகத்தால் பல புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டன.
இப்போது ஏற்றுமதி அதிகரிப்பும், அதன் வழியாக வேலை வாய்ப்பு உயர்வும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்திலும் அமெரிக்காவின் பெறுமதி கூடும் டாலரிலும் பொருட்களை வாங்குவதைவிட இவை இரண்டோடும் ஒப்பிட்டால் பெறுமதி குறைந்த டேனிஸ் குறோணரில் பொருட்களை வாங்குவது இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வசதியாக இருக்கிறது, இது டென்மார்க்கிற்கு வாய்ப்பாக இருக்கிறது.
அதேவேளை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எடுத்த முடிவால் டேனிஸ் பொருளாதாரம் பலத்த சிக்கலை எதிர்நோக்குகிறது, பிரிட்டனுக்கான டேனிஸ் ஏற்றுமதிகள் தள்ளாட்டம் கண்டுள்ளன, இது வேலை வாய்ப்பை பாதிக்கும்.
பிரிட்டனுக்கான ஏற்றுமதிகள் படுத்தால் இங்கு பலர் வேலை இழந்து வீடுகளுக்கு போய் படுக்க வேண்டிய நிலை வரும்.
இந்த அவலத்தை வெற்றி கொள்ளும் யோசனைகளை பேசாமல் படுத்திருந்து என்ன பயன் அதுதான் டேனிஸ் ஸ்ரேற்மினிஸ்டர் லாஸ் லொக்க ராஸ்முசன் இப்போது ஒல்லாந்து ஹேக் நகரை சென்றடைந்துள்ளார்.
வர்த்தகத்தில் கில்லாடிகளான கொலண்டுடன் இணைந்து புதிய பாதையை வகுக்க ஆசை கொண்டுள்ளார்.
இருந்தாலும்..
வரும் யூன் பிரிட்டனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் ஐரோப்பிய பொருளாதாரத்தில் புதிய தளர்வான போக்கை ஏற்படுத்தி டேனிஸ் ஏற்றுமதிகளின் வாய்ப்புக்களை அப்படியே தொட வழிகாட்டும் என்றும் நம்பப்படுகிறது.
இல்லாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும், இதை கச்சிதமாக வெற்றி கொள்ள என்ன செய்யலாம்ஸ?
டென்மார்க்கில் உள்ள சிறிய, இடைநிலை நிறுவனங்களுக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டும், இந்த நிறுவனங்களின் பங்குகளை சாதாரண மாதச்சம்பளம் பெறுவோரும் வேண்டக்கூடியவாறு வரியில் புதிய திருத்தங்கள் அவசியம் என்று எல்.ஓ தொழிற்சங்கம் கூறுகிறது.
இவ்வாறு சர்வதேச சிக்கல்களுக்கு ஏற்ப புதிய வியூகங்களை வகுத்து, தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அல்லும் பகலும் முயற்சிகள் எடுக்கிறது டென்மார்க்.
tks.s .k.durai