
லண்டன் விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் உளவுத்துறை கொடுத்த வெடிகுண்டு! 03
மொசாத் கொடுத்த பணத்தில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து டெல்-அவிவ் செல்வதற்கான எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸின் டிக்கெட்டை ஹின்டாவி மேரியிடம் கொடுத்தார் என்பதுடன் கடந்த பாகத்தை முடித்திருந்தோம். அந்த டிக்கெட்டுடன் தொடங்கியது மொசாத்தின் லண்டன் ஆபரேஷன் – டிக்கெட் வாங்கிக் கொடுத்த ஹின்டாவிக்கே ஆபரேஷனின் முழுமையான பரிமாணமும் தெரியாமல்!
1986-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 17-ம் தேதி.
அன்றைய தினத்தில்தான் மேரியின் பெயரில், எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. மேரி ஏர்போர்ட்டுக்கு கிளம்பவேண்டிய நேரமும் வந்தது. அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஹின்டாவி, மேரியின் வீட்டுக்கு வந்திருந்தார். சூட்கேஸூடன் மேரி தயாராக இருந்தார்.
“என்னுடைய பெற்றோர்களைச் சந்திக்கும்போது வெறும் கையுடன் போனால் நன்றாக இருக்காது. அதற்காக சிறிய பரிசுப்பொருள் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். எனது தந்தையிடம் அதை கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள்” என்றார் ஹின்டாவி.
“கொடுங்கள்.”
“அது இப்போது என்னிடம் இல்லை. எனது நண்பர் ஒருவர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணிபுரிகிறார். அவர் விமான நிலையத்தில் வைத்து அதை உங்களிடம் கொடுப்பார்.”
“சரி” என்றார் மேரி சந்தேகப்படாமல்.
இருவரும் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்கள். எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் செக்கின் கவுன்டரில் மேரி செக்கின் செய்து போர்டிங் பாஸ் எடுக்கும்வரை ஹின்டாவி அவருடன் நின்றிருந்தார்.
பரிசுப்பொருளை கொடுக்கவேண்டிய நண்பர் வரவில்லை.
விமானத்துக்கு நேரமாகவே, பரிசுப்பொருள் இல்லாமலேயே, மேரி கிளம்பிச் சென்றார். பிரிட்டிஷ் செக்யூரிட்டி செக்கிங் முடிந்து எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் மேரி உள்ளே செல்வதை, ஏர்போர்ட் டிபாச்சர் தளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஹின்டாவி.
பரிசுப்பொருள் கொடுக்க வேண்டிய நண்பர் ஏன் வந்து சேரவில்லை? மொசாத்தின் திட்டம் அதுதான். பரிசுப்பொருளை மேரியிடம் எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் செக்கின் கவுன்டரில் வைத்து கொடுப்பதாக திட்டமில்லை. காரணம், அப்படிக் கொடுத்தால், பிரிட்டிஷ் ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்கிங்கில் ‘பரிசுப்பொருள்’ சிக்கிக் கொள்ளும்!
பிரிட்டிஷ் ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்கிங் முடிந்தபின் இமிகிரேஷனை அடைந்தார் மேரி. அங்கு எந்த சிக்கலும் இல்லை. அதைக் கடந்து, எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் அதிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போர்டிங் லவுஞ்சை நோக்கி சென்றார்.
அதுவரை பரிசுப்பொருள் கைக்கு வந்து சேரவில்லை.
‘அதிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போர்டிங் லவுஞ்ச்’ என்று குறிப்பிட்டோம் அல்லவா? சும்மா சம்பிரதாயத்துக்கு சொல்லப்பட்ட வாக்கியமல்ல அது. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் எத்தனைபேர் வெளிநாடு ஒன்றில் எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் விமானத்தில் பயணித்தீர்களோ, தெரியாது. விமானம் ஏறுமுன் பயணிகளை பிய்த்து எடுத்து விடும் ஏர்லைன்ஸ் அது (இன்றுகூட அதுதான் நிலை).
காரணம், எந்த நிமிடத்திலும் குண்டு வைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் உள்ள விமானங்களை இயக்கும் விமான நிறுவனம் அது.
வெளிநாட்டு ஏர்போர்ட்டுகளில் எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் விமானங்களில் ஏறுவதற்கு பிரத்தியேக போர்டிங் லவுஞ்ச் உள்ளது. இரண்டு அடுக்கு பாதுகாப்பு கொண்ட லவுஞ்ச் அது. இங்கு எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் சொந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களில் 4 பேர், அந்த விமானத்திலேயே வந்து, அதே விமானத்தில் திரும்பிச் செல்லும் ஆட்கள்.
லண்டன் ஹத்ரோ விமான நிலையத்தில், இமிகிரேஷனுக்கு செல்லுமுன், பிரிட்டிஷ் செக்ரியூட்டி செக்கிங் நடக்கும். அதன்பின் எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸின் பிரத்தியேக லவுஞ்சை அடைந்தால், அதில் முதல் கட்ட பாதுகாப்பு சோதனை நடக்கும். அதை செய்பவர்கள், எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸின் லண்டன் பாதுகாப்பு ஊழியர்கள்.
பாஸ்போர்ட்டை செக் பண்ணியபின், ஒவ்வொரு பயணியும் உடல் பரிசோதனை செய்யப்படுவார். பயணி இஸ்ரேலிய பிரஜையாக இருந்தால், உள்ளே போகலாம். வேறு நாட்டு பிரஜையாக இருந்தால், இரண்டாம் கட்ட பாதுகாப்பு சோதனைக்கு அனுப்பப்படுவார்.
இந்த விமானம் டெல்-அவிவ் நகரில இருந்து லண்டனுக்கு வந்து, திரும்பி டெல்-அவிவ் செல்லும் விமானம். அங்கிருந்து வந்தபோது அதில் 4 செக்யூரிட்டி அதிகாரிகள் வந்திருப்பார்கள். அவர்கள்தான் 2-ம் கட்ட பாதுகாப்பு பரிசோதனை செய்யும் ஆட்கள். இவர்கள் இஸ்ரேலிய உளவுத்துறை ஷின் பெட்டினால் (Shin Bet) பயிற்சி கொடுக்கப்பட்ட ஆட்கள்.
அந்த விமானத்தில் பயணிக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தவிர்ந்த வெளிநாட்டு பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை செக் பண்ணும் இவர்கள், அந்த பயணி எதற்காக இஸ்ரேல் செல்கிறார் என்பது போன்ற விபரங்களை கேட்பார்கள். வெளிநாட்டு பயணியின் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்ட சில அரபு நாடுகளுக்கு சென்ற ஸ்டாம்ப் இருந்தால், கேள்விகள் அதிகமாகும். இதன்பின் தமக்கு திருப்தி ஏற்பட்டாலே, பயணிகளை உள்ளே அனுமதிப்பார்கள்.
இந்த செக்கிங் மிக சீரியசாக நடக்கும். ஏன் தெரியுமா? இந்த 4 பேரும், அதே விமானத்தில் மற்ற பயணிகளுடன் பயணிக்க போகிறார்கள். விமானம் வெடித்தால், அதில் பயணிக்கும் இவர்களுக்கும் சமாதிதான்!
அதனால், எந்த காம்பிரமைஸூம் இல்லாத செக்கிங் இது.
சந்தேகத்துக்கு இடமான பயணிகளை எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சில் பயணம் செய்ய முடியாமல் இவர்களே தடுத்து விடுவார்கள். டிக்கெட் பணம், திருப்பி கொடுக்கப்படும்.
இதை ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறோம் என்றால், எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்சின் விமானங்கள் ‘அதி பாதுகாப்பு’ கொண்டவை என்பதை அடித்துச் சொல்லுவதற்காக! அப்படியான ‘அதி பாதுகாப்பு’ விமானம் ஒன்றினுள் வெடிகுண்டு கொண்டு செல்வதே இந்த ஆபரேஷன்.
இஸ்ரேலின் விமானத்தில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வெடிகுண்டு கொண்டு செல்ல திட்டமிட்ட ஏஜென்சி, அவர்களது சொந்த உளவுத்துறை மொசாத் என்பது இந்த ஆபரேஷனின்ஸ விசேஷம்!
அதை லண்டன் ஏர்போர்ட்டில் செக் பண்ணவேண்டிய மற்றொரு இஸ்ரேலிய உளவு ஏஜென்சி ஷின் பெட் பயிற்சி கொடுத்து அனுப்பியுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கே இப்படியொரு திட்டத்தில் வெடிகுண்டு வருகிறது என்று தெரியாது என்பது,ஸ அதி விசேஷம்!இஸ்ரேலியர் அல்லாத மேரியின் பாஸ்போர்ட், ஷின் பெட் பயிற்சி பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது. அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது கைப்பை மீண்டும் சோதனையிடப்பட்டது.
இறுதியில் பயணம் செய்வதற்காக லவுஞ்சுக்குள் அனுமதிக்கப்பட்டார். அந்த டிப்பாச்சர் லவுஞ்சே ஒரு சிறை போலதான். உள்ளே போனால், வெளியே வர அனுமதியில்லை (விமானம் எவ்வளவு தாமதமானாலும், உள்ளேயே இருக்க வேண்டியதுதான்).
1986-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 17-ம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து டெல்-அவிவ் செல்ல இருந்த போயிங் 747 விமானத்தில் பயணிப்பதற்கு 355 பயணிகள் புக்கிங் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே வந்து அந்த லவுஞ்சில் விமானம் புறப்படுவதற்காக காத்திருந்தார்கள்.
லவுஞ்சின் உள்ளே கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு போடப்பட்ட ஆசனங்கள் எதுவும் காலியாக இருக்கவில்லை. சுவரோரமாக நின்று கொண்டிருந்தார் மேரி.
“மேரி” அழைக்கும் குரல் பின்புறத்திலிருந்து கேட்டது. திரும்பி பார்த்தார்.
விமான நிலையத்தின் துப்பரவு தொழிலில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நின்றிருந்தார். துப்பரவு தொழிலாளர்கள் அணியும் நீலநிற சீருடை அணிந்திருந்த அவரை பார்த்தால் இஸ்ரேலியரா அரேபியரா என்று சொல்லமுடியாத தோற்றம்.
“யெஸ். நான்தான் மேரி”
“நான் ஹின்டாவியின் நண்பன். இதோ ஹின்டாவின் தந்தையிடம் சேர்ப்பிக்கப்படவேண்டிய பரிசுப்பொருள்.”
“உங்களைத்தான் வெளியே செக்கின் கவுன்டரில் எதிர்பார்த்து கொண்டிருந்தோம். நல்லவேளை இங்காவது வந்தீர்களே.. நன்றி” என்று கூறிய மேரி அவர் கொடுத்த பொருளை வாங்கிக் கொண்டார்.
மறுநிமிடமே பரிசுப்பொருளை கொடுத்தவர் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து மறைந்து விட்டார். இப்போதும் மேரி சந்தேகப்படவில்லை.
விமானம் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், விமானத்தில் பயணிகளை ஏற்றுவது ஆரம்பமாகியது. விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பும் ஒரு பாதுகாப்பு செக்கிங் உண்டு. இந்த செக்கிங் எல்லாப் பயணிகளுக்கும் அல்ல. ‘ரான்டம் செக்கிங்’ என்பார்கள். அதாவது, ஒவ்வொரு பத்தாவது பயணியோ, பதினைந்தாவது பயணியோ செக்கிங் செய்யப்படுவார்.
மேரிக்கு முன்பு வரிசையில் நின்றவர்கள் விமானத்துக்குள் சோதனையில்லாமல அனுமதிக்கப்பட, மேரி சோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டார். இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இரண்டாவது தடவையாக அவரது உடமைகளை பரிசோதித்தார்கள்.
இம்முறை அவரது கையில் மேலதிகமாக ஒரு பொருள் இருந்தது – ஹின்டாவியின் தந்தைக்குக் கொடுக்கப்பட வேண்டிய பரிசுப்பொருள்.
அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டியின் அடியே மறைவாக ஒரு அறை. அதற்குள் இருந்தன பிளாஸ்டிக் வெடிகுண்டுகள்.
மேரி உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்வதில் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் ஆர்வம் காட்டினர். அப்போது, அந்த லவுஞ்சில் பயணிகளோடு பயணியாக இருந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரை தனியே அழைத்து ஏதோ கூறினார். அதன்பின், இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் மேரியை விசாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.5 வசம் மேரியையும், அவரது கையில் இருந்த பிளாஸ்டிக் வெடிகுண்டுகளையும் ஒப்படைத்து விட்டு மௌனமாகி விட்டார்கள்.
லவுஞ்சில் பயணியாக இருந்த நபர், மொசாத் உளவாளிகளில் ஒருவர். “நீங்கள் இதை டீல் பண்ண வேண்டாம். பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் பயணியை (மேரி) ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அவர்.
ஒருவேளை விமானம் ஏறுமுன் நடந்த ‘ரான்டம் செக்கிங்’கில் மேரி செக் செய்யப்படாமல் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தால், விமானத்துக்குள் வைத்து இந்த வெடிகுண்டுகளை வெளிப்படுத்தும் அசைன்மென்ட்டுக்காக பயணியாக வந்திருந்தார், மொசாத்தின் அந்த உளவாளி.
அதாவது, விமானம் புறப்படுமுன் எப்படியும் அந்த வெடிகுண்டு வெளிப்பட்டிருக்கும்!
பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், நிஜமான வெடிகுண்டுகள் என கண்டுகொண்டார்கள், பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.5ன் அதிகாரிகள். உடனே பாதுகாப்பாக விமான நிலையத்துக்கு வெளியே வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டன.
“ஏல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறக்கும் போது வெடிக்க வைக்க முயற்சி” என்ற கோணத்தில் மேரியை விசாரிக்க தொடங்கியது பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.5. முதல்கட்ட விசாரணை முடியும்வரை, அந்த விமானம் புறப்பட வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே எம்.ஐ.5ன் வேறொரு பிரிவினர் மற்றுமோர் அலுவலில் ஈடுபட்டிருந்தனர்.
ஏல்-அல் விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் எல்-அல் ஏர்லைன்ஸ் செக்கின் கவுன்டர்களில் பாதுகாப்பு கேமராக்களை மறைமுகமாகப் பொருத்தி வைத்திருந்தது எம்.ஐ.5. உளவுத்துறை. இதனால், கவுன்டருக்கு வரும் அனைவரும் அதன்மூலம் படம் பிடிக்கப்பட்டிருப்பார்கள்.
அந்த டேப்பை போட்டுப் பார்த்தார்கள் எம்.ஐ.5ன் வேறொரு பிரிவினர்.
அதில் மேரி செக்கின் பண்ணுவதற்காக கவுன்டரை நோக்கி வருவது படமாகியிருந்தது. மேரியுடன் கூடவே மற்றொருவர் வருவதும் தெரிந்தது.
அந்த நபர் ஹின்டாவி.
உடனே ஹின்டாவியை தேடும் முயற்சி தொடங்கியது. புறப்படுவதற்காக காத்திருந்த எல்-அல் விமானத்தின் பயணிகளில் ஒருவராக ஹின்டாவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்துக்குள் ஏறிச் சோதனையிட்டார்கள் எம்.ஐ.5 அதிகாரிகள்.
விமானத்துக்குள் அவர் இல்லை. அப்படியானால் அவர் பயணியல்ல – வழியனுப்ப வந்தவர் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
அதையடுத்து, எல்-அல் விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
ஹின்டாவியின் போட்டோவை பிரின்ட் போட்டு கொண்டு அவரை முதலில் ஹீத்ரோ விமான நிலையத்திலும், பின்னர் வெளியேயும் தேடத் தொடங்கியது பிரிட்டிஷ் பொலீஸ். அந்த ஏரியாவிலேயே அவர் இல்லை.
சரி. மேரியை விமானம் ஏற விட்டுவிட்டு, ஹின்டாவி எங்கே போனார்? இந்த ஆபரேஷனின் சுவாரசியமான பகுதியே அதுதானே!
ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஹின்டாவி நேரே லண்டனில் இருந்த சிரியா நாட்டு தூதரகத்துக்கு போனார் என்பது சுவாரசியம் என்றால், தூதரகத்துக்கு எப்படி போய் சேர்ந்தார் என்பது அதைவிட சுவாரசியம்.ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஹின்டாவி நேரே லண்டனில் இருந்த சிரியா நாட்டு தூதரகத்துக்கு போனார் என்பது சுவாரசியம் என்றால், தூதரகத்துக்கு எப்படி போய் சேர்ந்தார் என்பது அதைவிட சுவாரசியம் என்று கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். சரி. ஹின்டாவி லண்டனில் இருந்த பிரிட்டிஷ் தூதரகத்துக்கு எப்படி போனார்?
அபு சொல்லிக் கொடுத்ததன்படி (அபுவுக்கு இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் சொல்லிக்கொடுத்தபடி) ஹின்டாவி நடந்து கொண்டார். மேரி, பிரிட்டிஷ் பாதுகாப்பு சோதனையை சிக்கல் இல்லாமல் கடந்து செல்வதை பார்த்த பின்னர், விமான நிலையத்தின் மற்றுமோர் பகுதிக்கு சென்றார்.
குறிப்பிட்ட சில விமான நிறுவனங்கள், தமது விமானத்தில் வரும் பயணிகளுக்காக பிரத்தியேக சொகுசு பஸ்களை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இயக்குகின்றன. இதற்காக தனியாக ஒரு இடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்துதான் விமான சேவை நிறுவனங்கள் விமான நிறுவனத்திலிருந்து லண்டன் நகருக்குள் பயணிகளைக் கொண்டு செல்லும் பஸ்கள் புறப்படும்.
அந்த இடத்துக்குதான் சென்றார் ஹின்டாவி.
அங்கே சென்றவர் சிரியாவின் தேசிய விமான நிறுவனமான சிரியன் அராப் ஏர்லைன்ஸின் (Syrian Arab Airlines – مؤسسة الطيران العربية السورية) பஸ்ஸில், அந்த விமானத்தில் வந்த பயணிபோல ஏறி அமர்ந்து கொண்டார்.
அந்த நாட்களில், எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸ் விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து டெல-அவிவ் நகருக்கு புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், சிரியன் அராப் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று டமாஸ்கஸ் நகரில் இருந்து லண்டன் வந்து சேரும். அதில் வரும் பயணிகளுக்காக சிரியன் அராப் ஏர்லைன்ஸின் சொகுசு பஸ் லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டுக்கு வரும்.
ஹின்டாவி அந்த பஸ்ஸில் ஏறியபோது, அதில் ஏற்கனவே சிரியன் அராப் ஏர்லைன்ஸின் விமானத்தில் வந்த பயணிகள் சிலர் அமர்ந்திருந்தனர். ஹின்டாவி ஏறியபின் மேலும் சில சிரியா பயணிகள் வந்து சேரவே, பஸ் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் நகரை நோக்கி புறப்பட்டது.
பஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பி லண்டன் நகருக்குள் பிரவேசித்தபோது பஸ்ஸின் டிரைவரை அணுகினார் ஹின்டாவி. “பஸ்ஸை உடனடியாக சிரியா நாட்டுத் தூதரகத்துக்குச் செலுத்துங்கள்” என்றார்.
“அப்படிச் செய்ய முடியாது. இது லண்டன் சென்ட்ரல் பஸ் நிலையம் (London Central Bus Station) வரைதான் செல்லும்” என்றார் டிரைவர்.
“நான் சொல்வதைச் செய்யுங்கள். சிரிய தூதுரக அதிகாரி நான். எனக்கு உத்தரவிடும் அதிகாரம் இருக்கிறது. பஸ்ஸை சிரிய தூதரகத்துக்கு செலுத்துங்கள். மிக முக்கிய ராஜாங்க விஷயம் இது”
டிரைவர் வேறுவழியில்லாமல் பஸ்ஸை சிரியா நாட்டுத் தூதரகத்தை நோக்கிச் செலுத்தினார். லண்டனிலுள்ள சிரியா தூதரகத்தின் செக்யூரிட்டியில் இருந்தவர்கள், தமது நாட்டு விமான நிறுவனத்தின் பஸ் அது என்பதால், காம்பவுண்டுக்குள் அனுமதித்தார்கள்.
பஸ் தூதரகத்துக்கு உள்ளே நுழைந்தது
சிரியன் அராப் ஏர்லைன்ஸின் பஸ் லண்டனிலிருந்த சிரியா நாட்டு தூதரகத்துக்குள் நுழைந்தபோது தூதரகத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகிப் போய்விட்டது. தூதரகத்துக்கு வரவேண்டிய முக்கியஸ்தர்கள் லண்டன் விமான நிலையத்துக்கு வந்தால், தூதரகத்தின் சார்பில் யாராவது வரவேற்க சென்றிருப்பார்கள்.
அப்படி வருபவர்களுக்குப் பிரத்தியேக போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த பஸ் சாதாரண பயணிகள் சிரியன் அராப் ஏர்லைன்ஸின் விமானத்தில் வந்திறங்கி லண்டன் நகருக்குள் செல்வதற்கான பஸ். அது ஏன் தூதரகத்துக்கு உள்ளே வருகின்றது என்ற கேள்வியே, தூதரகத்தில் இருந்தவர்களின் ஆச்சரியத்துக்கு காரணம்.
தூதரகத்தின் வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து, இந்த பஸ்ஸை உள்ளே அனுமதித்த பாதுகாப்பு அதிகாரி, பஸ்ஸின் டிரைவர் கூறியதாக தூதரகத்துக்கு உள்ளே இருந்த வரவேற்பாளருக்கு இன்டர்காம் மூலம் தெரிவித்த தகவலும் குழப்பமாக இருந்தது.
“சிரியா தூதரகத்தில் உத்தரவிடும் அதிகாரமுடைய அதிகாரி ஒருவர் இந்த பஸ்ஸில் வருகின்றார்” என்பதே அந்த தகவல்.
சிரியா நாட்டின் பிரிட்டனுக்கான தூதரும் அப்போது தூதரகத்துக்குள்தான் இருந்தார். உத்தரவிடும் அதிகாரமுடைய மற்ற உயரதிகாரிகளும் அப்போது தூதரகத்துக்குள்தான் இருந்தார்கள். இவர்கள் யாரும் இல்லாவிட்டால் பஸ்ஸூக்குள் இருப்பவர்கள் யார்?
டமாஸ்கஸ்ஸில் இருந்து விசேடமாக அனுப்பி வைக்கப்பட்ட யாராவது வருகிறார்களா?சிரியன் அராப் ஏர்லைன்ஸின் பஸ், தூதரகத்தின் இரண்டாம் நுழைவாயிலை அடைந்தபோது, தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் தாமே நேரடியாக வாயிலுக்கு சென்று பார்த்தார். பஸ்ஸில் இருந்து இறங்கிய ஹின்டாவியை அவர் அதற்கு முன்னர் பார்த்தே இருக்கவில்லை.
“நீங்கள் யார்? எதற்காக தூதரகத்திலுள்ள உத்தரவிடும் அதிகாரமுடைய அதிகாரி என்று உங்களை சொல்லி கொண்டீர்கள்” என்று கேட்டார் இரண்டாம் செயலாளர்.
“என்னுடைய பெயர் ஹின்டாவி. நான் உங்களுடைய தூதரகத்திலுள்ள சிரியா உளவுத்துறையின் அதிகாரியுடன் அவசரமாக பேசவேண்டும்.”
“என்ன விஷயம் தொடர்பாக?”
“அதை அவரிடம்தான் நேரில் சொல்ல முடியும். இது ஒரு மிக மிக முக்கியமான விஷயம்”
இதைக்கேட்டு சிறிது நேரம் யோசித்த தூதரக இரண்டாம் செயலாளர், ஹின்டாவியை இரண்டாம் வாயிலின் அருகிலுள்ள அறையொன்றில் அமரும்படி கூறிவிட்டு உள்ளே சென்றார். அறைக்குள் அமர்ந்த ஹின்டாவியின் போட்டோ ரகசியமாக எடுக்கப்பட்டு தூதரகத்தின் மற்றுமோர் அறையில் கம்ப்யூட்டர் ஒன்றின் மூலம் ஆராயப்பட்டது.
ஒரு சில நிமிடங்களில் சிரியா உளவுத்துறை கம்ப்யூட்டர் டேட்டா பேஸில் ஹின்டாவி பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை என்பது சிரியா உளவுத்துறையின் லண்டன் கிளை தலைவருக்குப் புரிந்து போனது.
“இவர் ஒரு புதிய ஆள்”
வந்த ஆளின் தோற்றத்திலிருந்து அவர் அரபுக்காரர் என்பது தூதரகத்தில் இருந்த உளவுத்துறை பொறுப்பாளருக்கு நன்றாக புரிந்தது. இதனால் தூதரகத்தின் மற்றுமோர் உயரதிகாரி அறைக்குள் அனுப்பப்பட்டார் – ஹின்டாவியை சந்தித்து விஷயம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக.
உள்ளே வந்தவர் ஹின்டாவியுடன் கை குலுக்கிக் கொண்டார். “சொல்லுங்கள் என்ன விஷயம்”
“நீங்கள்தான் தூதரகத்திலுள்ள உளவுப்பிரிவின் தலைவரா?”
“அப்படித்தான் வைத்து கொள்ளுங்கள்”
“இல்லை. நீங்கள்தான் உளவுப் பிரிவின் தலைவரா என்பது எனக்கு உறுதியாகத் தெரிய வேண்டும். விஷயம் அதி முக்கியமானது”
“ஆம். நான்தான் உளவுப் பிரிவின் தலைவர் (பொய்!)”
“என்னை இந்த நிமிடத்தில் பிரிட்டிஷ் பொலீசார் லண்டன் முழுவதும் தேடிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் என்னை தூதரகத்துக்குள் மறைத்து வைத்திருந்து விட்டு, இங்கிருந்து பத்திரமாக சிரியாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும். சிரியாவில் எனக்கு அரசியல் புகலிடம் கொடுக்க வேண்டும்”
“நாங்கள் ஏன் அதைச் செய்ய வேண்டும்? சரி. அதற்கு முன்னர், உங்களை பிரிட்டிஷ் பொலீசார் எதற்காக லண்டன் முழுவதும் தேடுகிறார்கள்?”
“ஏனென்றால் சற்று நேரத்துக்கு முன்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் நகருக்கு கிளம்பிச் சென்ற எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸ் விமானத்தில் நான் வெடிகுண்டு வைத்துவிட்டேன். விமானம் இப்போது வானில் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்” என்றார், ஹின்டாவி.
தூதரக அதிகாரி உடனே பரபரப்படைந்தார்.
“நீங்கள் சொல்வது உண்மையென்றால் இது தீவிரமான விஷயம்தான். இதோ முக்கிய நபர் ஒருவருடன் வருகிறேன்”என்று ஹின்டாவியை விட்டுவிட்டு பரபரப்புடன் வெளியேறினார்.
பாவம், அவருக்கு இது தமது தூதரகத்தை சிக்க வைக்க விரிக்கப்பட்ட வலை என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. இறுதிப் பாகம் தொடரும்
