சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி (Kimiya Yui), ரஷ்ய வீரர் ஒலெக் ப்ளாட்டோனோவ் (Oleg Platonov) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டனர்.
இவர்களது விண்வெளி ஆய்வுப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த குறித்த நான்கு வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால் வீரர்கள் குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை மாலை ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 10 மணிநேர பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக உயரத்தை குறைத்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கியது.
பின்னர், விண்வெளி வீரர்கள் சான் டியாகோ அருகே பசுபிக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை பாதுகாப்பாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வேளை, கடலில் நீந்திய டொல்பின்களை கண்டு ரசித்ததாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவர்கள் கடற்படை கப்பலின் மூலம் மீட்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில், விண்வெளியிலிருந்து இதுபோன்று அவசர தேவை கருதி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்த முதல் நிகழ்வு இதுவே என தெரிவிக்கப்படும் அதேவேளை தனியுரிமை கருதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வீரர் யார் என நாசா வெளியிட மறுத்து வருகிறது.