ஆறாத புண்ணிற்கான சத்திர சிகிச்சை
22 Nov,2025
இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கை அல்லது கால்களில் புண் ஏற்பட்டிருக்கும். இதற்காக அவர்கள் முதலுதவி சிகிச்சை மற்றும் நிவாரண சிகிச்சையை மேற்கொண்டிருப்பார்கள். வைத்தியரின் பரிந்துரையில் அதனை தொடர்ந்தும் பின்பற்றி இருப்பார்கள். ஆனால் அந்த புண் எளிதில் ஆறாமல்.. முழுமையாக நிவாரணம் கிடைக்காமல்.. உறுத்திக் கொண்டே இருக்கும். இது போன்ற தருணங்களில் ரத்தநாள சிகிச்சை நிபுணரை அணுகி அவர்களின் ஆலோசனையையும், அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் சம சீரற்ற தன்மை காரணமாகவும் , வயது முதுமையின் காரணமாகவும், புகைப்பிடித்தல் காரணமாகவும் சிலருக்கு கை அல்லது கால் பகுதியில் புண்கள் ஏற்பட்டால்... அவை சிகிச்சை பெற்ற பிறகும் முழுமையாக குணமடைவதில்லை. இவர்கள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தாலும்... புண்கள் ஆறாமல் சங்கடங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும்.
இதுபோன்ற தருணத்தில் ரத்தநாள சிகிச்சை நிபுணரை அணுகினால்.. அவர்கள் உங்களுடைய மருத்துவ வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டு, ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானிப்பார்கள். ஏனெனில் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கை, கால் போன்ற பகுதிகளில் உண்டாகும் புண்கள் ஆறாது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவம் ஏற்பட்டு இருப்பதைப் போல் உடலில் உள்ள ஏனைய ரத்தநாளங்களிலும் கொழுப்பு படிவம் ஏற்பட்டு இருக்கிறதா..? என்பதனை வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, அதை அகற்றுவதற்கான பிரத்யேக நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதன் பிறகு அந்த புண்களுக்கு முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.