வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், மழை வெள்ளத்திற்கு பயந்து பாம்புகள் வீடுகளுக்கு நுழையும் ஆபத்துகள் அதிகமாக இருக்கின்றன. எனவே எது ஆபத்தான பாம்பு என்பதையும், அதனிடமிருந்து எப்படி விலகி இருப்பது என்பதையும் தெரிந்துக்கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை,
4 வகை பாம்புகளால்தான் மனிதர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே இதனை அடையாளம் கண்டு, அதனிடமிருந்து விலகி இருப்பது அவசியம்.
1. கண்ணாடி விரியன் 2. கட்டுவிரியன் 3. நாகப்பாம்பு/நல்லப்பாம்பு 4. சுருட்டை விரியன் கண்ணாடிவிரியன் கண்ணாடிவிரியன் பாம்பு பெரும்பாலும் பகலில் சுறுசுறுப்புடன் வேட்டையாடும். இதன் முக்கிய உணவு எலிகள்தான். எனவே வயல்கள், கரும்பு தோட்டங்கள், நெல் குடோன்கள் என சமவெளி பகுதிகளில்தான் வசிக்கும். இது கடிப்பதற்கு முன்னர் தனது தோலை உரசி 'உஸ்' என ஒலி எழும்பும். இதை கண்டுகொள்ளாமல், நெருங்கினால் நிச்சம் கடித்துவிடும்.
இந்த வகை பாம்புகள் மிக குறைவான நேரத்தில் கடித்துவிடும். நீங்கள் கண்களை மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும். இந்த பாம்பின் விஷயம் ரத்தம் உறைவதை தடுக்கும். அல்லது ரத்தத்தை வேகமாக உறைய வைத்துவிடும். இதனால் உள்ளுறுப்புகள் செயலிழக்கும். முதலில் பாதிப்படைவது சிறுநீரகம்தான். எனவே கடிபட்டவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு போக வேண்டும்.
கட்டுவிரியன் அடுத்து கட்டுவிரியன். இந்த வகை பாம்புகள் இரவில்தான் வெளியே வரும். மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே இது இருக்கும் என்பதால் மனித-பாம்பு மோதல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கிராமங்களில் இந்த பாம்பின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அதாவது இது கடித்தவுடன் வலி பெரியதாக இருக்காது. சாதாரணமாக கொசு கடித்ததை போலவோ,
அல்லது எறும்பு கடித்ததை போலவோதான் இருக்கும். கவனிக்காமல் விட்டுவிட்டால், கொஞ்சம் நேரம் கழித்து வலி உடல் முழுவதும் பரவும், அப்போதும் கவனிக்காமல் இருந்தால் மரணம் நிச்சயம். இது கடித்தவுடன் கண்கள் இமை கனமாக இருப்பதாக தோன்றும், பார்வைகள் இரட்டையாக தெரியும், பேச்சு தெளிவில்லாமல் குழம்பும், உடல் பலவீனம் ஏற்படும். பொதுவாக கட்டுவிரியன் கடித்தால் அதன் பாதிப்புகள் தெரிய கொஞ்சம் தாமதமாகலாம். இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும்.
நாகப்பாம்பு/நல்லப்பாம்பு பெயர் என்னவோ நல்ல பாம்புதான். ஆனால் இதுவும் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷத்தை கொண்டிருக்கிறது. இந்த வகை பாம்புகளை நெருங்கும்போது படம் எடுத்த எச்சரிக்கும். மீறி அருகில் சென்றால், கடிப்பதை போல பயமுறுத்தும். அதையும் தாண்டி அதை பிடிக்க போனால் நிச்சயமாக கடித்துவிடும். இந்த வகை பாம்புகள் கிராம தெய்வங்களாக இன்றும் வணக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட இந்த வகை பாம்புகள், விவசாய நிலங்களுக்கு அருகில்தான் இருக்கும். கடித்துவிட்டால்,
நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நரம்புகளுக்கும், தசைகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். இதனால், சுவாசிக்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படும். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் காப்பாற்றிவிடலாம்.
" சுருட்டை விரியன் ஆள் பார்க்க தம்மாத்துண்டுதான் இருப்பான். போட்டால் மரணம் நிச்சயம். இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமானவை இந்த சுருட்டை விரியன் கடித்துதான் ஏற்படுகிறது. மற்ற மூன்று பாம்புகளை ஒப்பிடும்போது அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் ஆக்ரோஷமானவையாக காணப்படும். மலையடிவாரங்களிலும், விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலும் இந்த வகை பாம்புகள் காணப்படும்.
இந்த விஷம் ரத்தம் உறைதலை தடுக்கும். இதனால் கடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்துக்கொண்டே இருக்கும். மட்டுமல்லாது, பல் ஈறுகளிலிருந்து, சிறுநீரிலும் கூட ரத்தம் வெளியேறும். சரியான நேரத்திற்கு அரசு மருத்துவமனைக்கு போகாவிட்டால் உடனடியாக கிட்னி பெயிலியர் ஏற்படும். பின்னர் உயிரிழப்பு ஏற்படும். எப்படி அடையாளம் காண்பது? நாகபாம்புக்கும், சாரை பாம்புக்கு பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. நாகப்பாம்பின் தலையின் பின்புறம் U வடிவம் இருக்கும்.
இந்த வகை பாம்புகள் கடிப்பதற்கு முன்னர் படம் எடுத்து ஆடும். ஆனால் சாரைப்பாம்பு அப்படி செய்யாது. மனிதர்களை பார்த்துவிட்டால் உடனடியாக ஓடி ஒளிந்துக்கொள்ளும். அதேபோல கண்ணாடி விரியன் பாம்பை பலரும் மலைப்பாம்பு குட்டி என தவறாக நினைத்துக்கொள்வார்கள். கண்ணாடி விரியன் தோலில் O வடிவ அடையாளம் உடல் முழுவதும் இருக்கும். மலைப்பாம்பு குட்டிக்கு அப்படி இருக்காது. காய்ந்த சருகுகள் போல அடையாளம் இருக்கும். இதை தெரிந்துக்கொள்ளாமல் கண்ணாடி விரியனை பலரும் பிடிக்க முயற்சிப்பார்கள். கட்டுவிரியனுக்கும், வெள்ளிக்கோல் வரையன் பாம்புக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இரண்டும் பாக்க ஒரே மாதிரி இருந்தாலும், வெள்ளிக்கோல் வரையன் பாம்புகள் விஷமற்றவை.
இதன் தலையிலிருந்த கோடுகள் தொடங்கும். ஆனால் கண்ணாடி விரியனுக்கு தலையில் கோடுகள் இருக்காது. கொஞ்சம் தள்ளிதான் கோடுகள் தொடங்கும். இறுதியாக சுருட்டைவிரியனுக்கும், ஓலை பாம்புக்கும் இடையேயான வித்தியாசத்தை பார்ப்போம். ஓலை பாம்பு மனிதர்களை பார்த்தவுடன் தெரித்து ஓடும். ஆனால் சுருட்டைவிரியன் அப்படி கிடையாது. தாக்குவதற்காக உஸ் என ஒலி எழும்பும். எதிர்பார்ப்பதை விட மிகவும் வேகமாக மனிதர்களை தாக்கிவிடும். எனவே எது எந்த பாம்பு என்பதை அடையாளம் காண்பதற்கு பதில், உடனடியாக பாம்பு இருக்கும் இடத்தைவிட்டு பாதுகாப்பான தூரத்திற்கு நகர்ந்து செல்வதே புத்திசாலித்தனம். அதேபோல பாம்புகள் வீட்டிற்குள் புகுந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.