புற்றுநோயாளிகளுக்கு பெட் ஸ்கேன் பரிசோதனை அவசியமா..?
29 Sep,2025
கடந்த தசாப்தங்களில் வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெற்றால்... அவரது உரையாடலில் எம்முடைய உணவு சார்ந்த பழக்கம் தொடர்பான வினாக்கள் இடம்பெறும். இதற்கு பதிலளிப்பதன் மூலமாகவே வைத்தியர்கள்.. உங்களது பாதிப்பினை தெரிந்து கொண்டு, அதற்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்குவார்கள்.
எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? என்ற அறிவுரையும் நிச்சயம் இடம்பெறும். ஆனால் தற்போதைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் .. கட்டற்ற பொருளாதார சுதந்திரமும், கல்வி சுதந்திரமும் பெற்றதால்... உணவு முறையிலும், வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதனால் ஏற்படும் உடல் ரீதியான சிக்கல்களை வைத்தியர்கள் - கிளினிக்கல் டயக்னைஸ் எனும் கடந்த தசாப்தத்தை போல் அல்லாமல்.. இன்வெஸ்டிகேட் டயக்னைஸ் எனப்படும் பரிசோதனை அடிப்படையின் மூலம் துல்லியமாக அவதானித்து சிகிச்சை வழங்கி நிவாரணம் தருகிறார்கள். இந்த தருணத்தில் இன்றளவும் கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பரிசோதனைகள் குறித்த அச்சத்தை கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.. உடலில் ஏதேனும் ஒரு உறுப்பில் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு செல்களின் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இத்தகைய புற்றுநோய் கட்டிகளை தொடக்க நிலையில் கண்டறிவதற்காக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகள் தான் எக்ஸ்ரே- அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் -எம் ஆர் ஐ ஸ்கேன் .
ஆனால் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சைக்கும் முன்னரும், சிகிச்சைக்கு பின்னரும் பெட் ஸ்கேன்( PET Scan) எனப்படும் பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். எம்மில் பலருக்கும் இத்தகைய பரிசோதனை ஏன்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும்... இது தொடர்பான வினாவை வைத்திய நிபுணர்களிடம் எழுப்புவதில்லை.
இந்நிலையில் இத்தகைய பிரத்யேக பரிசோதனையான பெட் ஸ்கேன் பரிசோதனை மூலம் புற்றுநோயின் இயங்குத்திறன்- புற்றுநோய் எந்த உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது? - உடல் உறுப்பில் உள்ள கட்டி புற்றுநோயை உண்டாக்கும் கட்டியா? அல்லது தீங்கற்ற கட்டியா?- புற்றுநோய் கட்டி செயல்படுகிறதா? அல்லது செயல்படாமல் இருக்கிறதா? அல்லது அழிந்து விட்டதா? போன்றவற்றை துல்லியமாக தெரிந்து கொள்ள இத்தகைய பரிசோதனை அவசியமாகிறது.