கோபன்ஹேகனில் (Copenhagen) உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்றிரவு திடீரென மூடப்பட்டது
23 Sep,2025
டென்மார்க் தலைநகரமாகிய கோபன்ஹேகனில் (Copenhagen) உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்றிரவு திடீரென மூடப்பட்டது. விமானங்கள் தரையிறங்குவதும் கிளம்பிச் செல்வதும் நிறுத்தப்பட்டது.
விமான நிலையத்தின் வான் பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறப்பது அவதானிக்கப்பட்டதை அடுத்தே பாதுகாப்புக் கருதி விமான நிலைய சேவைகள் நிறுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தது இரண்டு அல்லது மூன்று பெரிய ட்ரோன்கள் வானில் பறந்தன என்று கோபன்ஹேகன் நகர பொலீஸ் பிரிவு தெரிவித்தது.
விமான நிலையப் பகுதியில் அதிக எண்ணிக்கையான பொலீஸ் வாகனங்கள் மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் களது பிரசன்னம் நேற்றிரவு முழுவதும் காணப்பட்டது.
கோபன்ஹேகன் நோக்கி வந்த விமானங்கள் பலவும்
அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவை டென்மார்க்கின் ஏனைய வான் தளங்களுக்கும் மற்றும் அயலில் உள்ள சுவீடன் அங்ஹெல்ஹோம் (லngelholm) மல்மோ (Malmய்) விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டன என்று ரீவி2 தொலைக்காட்சி அறிவித்தது.
எரிபொருள் பற்றாக்குறையுடன் வந்த ஒரேயொரு விமானத்தைத் தவிர மொத்தமாக 35 விமானங்கள் அங்கே தரையிறங்க விடாமல் நடுவானில் வைத்துத் திசை திருப்பப்பட்டன என்று தகவல்கள் கூறுகின்றன.
விமான நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அது வெறிச்சோடிக் காணப்பட்டது.
நள்ளிரவுக்குப் பின்னரே விமான சேவைகள் மெல்ல ஆரம்பித்தன.
ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன, அவற்றைப் பறக்க விட்டவர்கள் யார் என்பன போன்ற கேள்விகளுக்குப் பொலீஸார் இன்னமும் விளக்கம் தரவில்லை.
பால்டிக் மற்றும் ஸ்கன்டிநேவிய வான் பரப்பு களில் ரஷ்யாவின் வான் வழி அத்துமீறல்கள் அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன.
நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடா அல்லது தனிப்பட்ட விசமிகளது செயலா என்பது பற்றிய தகவல்களை இன்று
பின்னராக நடைபெறவுள்ள செய்தியாளர் மாநாட்டில் பொலீஸார் வெளியிடவுள்ளனர்.
இதற்கிடையில் கோபன்ஹேகன் சம்பவம் ரஷ்யாவின் அத்துமீறலே என்று உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.