மனித உருவில் அருள்புரியும் விநாயகர்... இந்த ஆதி விநாயகர் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா.?
27 Aug,2025
தற்போது நாம் யானை தலையுடன் காட்சியளிக்கும் விநாயகரை பார்த்திருப்போம். ஆனால் இந்த தலத்தில் விநாயகர் மனித உருவத்துடன் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டம் உள்ள திலதர்பணபுரி என்ற கிராமத்தில் காவிரி தென்கரையில் ஆதி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மூலவர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக அருள்பாலிக்கின்றார்.
இந்த விநாயகர் முதன்முதலாக மனித உருவத்தில் தோன்றி, பின்பு தான் பல்வேறு அவதாரங்களை கொண்டு உருவெடுக்கிறார் என்று புராண வரலாறு கூறுகிறது. இது குறித்து ஆதி விநாயகர் கோயில் பூசாரி கார்த்தி மற்றும் சிவராம் கூறுகையில், “இங்கு இருக்கக்கூடிய ஆதி விநாயகர் நர ரூபத்தில் உள்ளவர்.
நரம் என்றால் மனித ரூபம் என்று பொருள். நாம் எல்லா விநாயகர் கோயில்களிலும் விநாயகரை யானை முகத்தில் பார்த்திருப்போம். ஆனால் இங்கு பாலகணபதி என்று அழைக்கக்கூடிய 16 விநாயக மூர்த்தங்களில் மூல மூர்த்தமாக விளங்கக்கூடியவர் பாலகணபதி.
பது குழந்தை ரூபம் என்று சொல்வார்கள். அதேபோல் இந்தக் கோயில் ஆதி விநாயகரும் குழந்தை முகம் போல் காட்சியளிக்கின்றார். பார்வதி அம்பாள் சரிதத்திலிருந்து மஞ்சள் பிடித்து வைத்து பூஜை செய்கின்றாள். இந்த வடிவத்திலிருந்து வந்தவர் தான் ஆதி விநாயகர்.
விநாயகர் பார்வதிக்கு காவலுக்கு நிற்கும் போது சிவபெருமான் பார்வதியிடம் யார் இந்தப் பிள்ளை என்று கேட்கிறார். அதனால் தான் நாம் இன்றளவும் பிள்ளையார் என்று அழைத்து வருகிறோம். இந்த விநாயகர் தட்சணாமூர்த்தி போல் இருப்பார். கையில் ஆனந்த மூர்த்தி வைத்திருப்பார். ஒரு கை தொடையில் இருக்கும். பாசம், அங்குசம் என்று இரண்டு கைகள் பின்னாடி இருக்கும். ஆதி என்றால் முதல் என்று அர்த்தம். முதன்முதலில் தோன்றிய விநாயகர் என்பதால் ஆதி விநாயகர் என பெயர் வந்தது.
விநாயகர் யானை முகமாக மாறுவதற்கு முன் மனித முகமாக இருந்திருப்பார். அப்போது முதன்முதலாக விநாயகர் அவதரித்த தலம் தான் இந்த ஆதி விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி, துட்ச பக்தல சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி என ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்” என தெரிவித்தார்.