வரலாற்றில் முதற் தடவையாக பிரிட்டன் உளவு அமைப்புக்கு பெண் தலைவர் நியமனம்
17 Jun,2025
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 (MI6) “இன் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எம்.ஐ.6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, 'சி' என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும்.
ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே (Sir Richard Moore), விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள 47 வயதான பிளேசி மெட்ரவெலி (Blaise Metreweli) புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
'எம்.ஐ.,6'-உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ.- 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள பிளேசி மெட்ரவெலி, கடந்த 1999 முதல் உளவு அமைப்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.