மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் 99 சதவீதத்தை 2045 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கேட்ஸ் அறக்கட்டளை 2045 ஆம் ஆண்டுக்குள் தனது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் பெரும்பகுதியை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 175 பில்லியன் டாலர்கள். இது 2045 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் அவரது அறக்கட்டளை தனது செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தில் பேசிய 69 வயதான பில் கேட்ஸ், "என்னுடைய சொத்துக்களை அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் செலவிடப்படும்" என்று தெரிவித்தார்.
கேட்ஸ் அறக்கட்டளை மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது. அவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தவிர்க்கக்கூடிய இறப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது, தொற்று நோய்களால் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறையை வளர்ப்பது மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பது ஆகியவையாகும்.
பில் கேட்ஸின் சொத்துக்களில் பெரும்பாலானவை கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திலிருந்து வந்தவை. இது மைக்ரோசாஃப்ட் பங்கு விற்பனை மற்றும் ஈவுத்தொகை மூலம் ஈட்டிய வருவாயைப் பயன்படுத்தி நிறுவப்பட்டது. ப்ளூம்பெர்க் தரவு பகுப்பாய்வுகளின்படி, கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து பங்கு மற்றும் ஈவுத்தொகை மூலம் 60 பில்லியன் டாலர்களுக்கு மேல் திரட்டியுள்ளார். இதில் 2004 ஆம் ஆண்டில் கிடைத்த 3.3 பில்லியன் டாலர் ஈவுத்தொகையும் அடங்கும். அதை அவர் தனது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
தற்போது, உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் கேட்ஸ் சுமார் 1% பங்குகளை வைத்துள்ளார். அவர் மார்ச் 2020 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குழுவிலிருந்து விலகினார். அவருடைய பங்கு விவரங்கள் அதன் பிறகு ஆவணங்களில் தோன்றவில்லை. உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் உள்ள பங்குகள் அவரது தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை.
குழந்தைகளுக்கு 1% மட்டுமே
தனது செல்வம் மற்றும் பரம்பரை குறித்த நீண்டகால கருத்துக்களுக்கு ஏற்ப, கேட்ஸ் தனது சொத்தில் 1% மட்டுமே தனது குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை டிசம்பர் 31, 2045 அன்று தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்ளும் என்று பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்.
இது முன்னர் திட்டமிட்டதை விட பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு, அவர் தனது மதிப்பிடப்பட்ட 200 பில்லியன் டாலர் சொத்தில் 99 சதவீதத்தை அடுத்த இரண்டு தசாப்தங்களில் நன்கொடையாக வழங்குவதற்கான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
ஆப்பிரிக்காவில் சுகாதார விளைவுகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது பில்கேட்ஸ் வாதமாக உள்ளது. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஹை ரிஸ்க் கர்ப்பங்களை அடையாளம் காண ஏஐ- மூலம் இயக்கப்படும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, புதுமை தொழில் நுட்பம் எவ்வாறு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.