உலகமே கவனிக்கும் சிஸ்டைன் சேப்பல் சிம்னி! "வெள்ளை- கருப்பு புகை.." புதிய போப் தேர்வு பணிகள் தொடக்கம்
07 May,2025
உலகெங்கும் உள்ள பல கோடி கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைவராக அறியப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானார். இதற்கிடையே புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறை இன்று தொடங்குகிறது. இதற்காக உலகெங்கும் இருந்து வந்துள்ள கார்டினல்கள் இன்று வாடிகனில் கூடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் யார் புதிய போப் என்பது தெரிய வரும். கத்தோலிக்கத் திருச்சபை தலைவராகப் போப் பதவியில் இருப்பவர் கருதப்படுகிறார்.
அதன்படி கடந்த 12 ஆண்டுகளாகப் போப் பதவியில் இருந்தவர் போப் பிரான்சிஸ். இவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாகக் கடந்த மாதம் உயிரிழந்தார். ஈஸ்டர் நாளில் வீல்சேரில் வந்து மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ், அதற்கு மறுநாளே ஈஸ்டர் திங்களன்று காலமானார். போப் பிரான்சிஸ் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அந்த வாரமே இறுதிச் சடங்குகள் எளிமையாக நடைபெற்றன.
உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கிடையே இப்போது அடுத்த போப்பை தேர்வு செய்யும் செயல்முறை தொடங்குகிறது. கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் அடுத்த போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் அனைவரும் வாடிகன் நகரில் இன்று ஒன்று கூடுகிறார்கள். கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் யாராக இருந்தாலும் போப் பதவிக்கு வரலாம், ஆனால், பொதுவாக கார்டினல்கள் தங்களில் ஒருவரையே போப் ஆக தேர்வு செய்து கொள்வார்கள்.
இன்றைய தினம் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் கார்டினல்கள் கூட்டம் நடைபெறுகிறது. 135 கார்டினல்கள் கார்டினல்கள் அனைவரும் புதன்கிழமை பிற்பகல் சிஸ்டைன் சேப்பலில் புதிய போப்பை தேர்வு செய்ய ரகசியமாகக் கூடுகிறார்கள். அவர்களில் 135 பேர் மட்டுமே 80 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் அவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். இன்று கார்டினல்கள் கூட்டம் கூடினாலும் கூட இன்றைய தினமே புதிய போப் தேர்வு செய்யப்பட மாட்டார். அவர்கள் ஒருவரை ஒருவர் நன்று அறிந்து கொள்ள இரண்டு நாட்கள் கழித்தே முதல் சுற்று வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதாவது மே 9ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடக்கும். எப்போது தெரிய வரும் இருப்பினும், அன்றைய தினமும் கூட புதிய போப் தேர்வாவார் என உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒட்டுமொத்த கார்டினல்களில் 3ல் 2 பங்கு வாக்கு பெற்றால் மட்டுமே புதிய போப்பாக தேர்வாக முடியும். இதனால் போப் தேர்வு சில நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டம் ரகசியமாகவே நடக்கும்.. 70 நாடுகளைச் சேர்ந்த இந்த கார்டினல்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.. அவர்கள் தங்கள் செல்போன்களை கொடுத்துவிட்டுத் தான் சிஸ்டைன் சேப்பலுக்கு உள்ளே செல்ல வேண்டும். அங்குள்ள புகைப்போக்கியில் வரும் புகையை வைத்தே புதிய போப் தேர்வானாரா என்பது தெரிய வரும். புகைப்போக்கியில் வெள்ளை புகை வந்தால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என அர்த்தம். கருப்பு புகை என்றால் தேர்வாகவில்லை என அர்த்தம்.
யாருக்கு வாய்ப்பு புதிய போப்பிற்கான ரேஸில் இத்தாலிய கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள், ஹங்கேரிய கார்டினல் பீட்டர் எர்டோ உள்ளிட்டோர் தேர்வாக வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. போப் தேர்வில் இந்த முறை கார்டினல்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் புதிய போப் தேர்வு செய்யப்பட பல நாட்கள் கூட ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.