உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்...
இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள்.
பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது.
கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார்.
"இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த வலி எனது ஆசைக்குத் தடையாக இருக்கிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விஷயத்தைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது" என்று கூறுகிறார் சூசன்.
மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்றதற்குப் பிறகு கழிக்கக் கூடும்.
ஹார்மோன் சுரக்கும் அளவு குறைவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்று போவதே மெனோபாஸ் எனப்படுகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு பெண்களால் குழந்தை பெற முடியாது. பெண்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதுதான் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதனால்தான் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இவர் பிரிட்டனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வியை மக்களிடையே ஊக்குவித்து வருகிறார்.
ஆனால் பெண்கள் உடலுறவு பற்றிப் பேசுவது இன்னும் பல கலாசாரங்களில் ஒரு தடையாக இருக்கிறது. "உடலுறவின்போது வலி ஏற்படுவது இயல்பானது என்று கருதும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் உடலுறவுகொள்ளும்போது ஓர் ஆணை மகிழ்விக்க இந்த வலியைத் தாங்கிக் கொள்வது தனது பொறுப்பு என்று நம்பும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே.
இதுபோன்ற நம்பிக்கைகள் காரணமாகப் பல பெண்கள் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மருத்துவர்களிடம் வருவதைத் தவிர்த்து அமைதியாக அவதிப்படலாம் என்று மருத்துவர் அஸிசா கூறுகிறார்.
உடலுறவு கொள்ள ஆசையைத் தூண்ட ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (இதையும் கருப்பைகள் சுரக்கின்றன) ஹார்மோன்கள் காரணமாக இருப்பதாக மருத்துவர் அஸிசா விளக்குகிறார்.
இந்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும்போது உடலுறவின் மீதான ஆசையில் மாற்றங்களை அனுபவிப்போம் என்கிறார் அவர்.
ஜெர்மனியில் வசிக்கும் ரோஸிக்கு 45 வயதாகிறது. அவரது 30 வயதில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கட்டாய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அனுபவித்த மாற்றங்கள் தீவிரமானவை என்று அவர் பிபிசியிடம் அவர் கூறினார்.
"எனக்கு உடலுறவு கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் திடீரென்று அந்த ஆசை போய்விட்டது. அதனால் என்னால் எந்த உடல் ரீதியான தூண்டுதலையும் அனுபவிக்க முடியவில்லை," என்றார்.
உடலுறவில் ஆசை குறைவது மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுவது ஆகிய இரு பிரச்னைகளுக்காகத்தான் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியாவில் மனநல மருத்துவராகவும் உடலுறவு சார்ந்த சிகிச்சையாளராகவும் பணியாற்றும் மருத்துவர் நசானின் மாலி.
''பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முடங்கிப் போகிறார்கள். பல பெண்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இல்லை. ஆனால், ஆணுறுப்பை தன்னுள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு இல்லாமல் போகிறது" என்று அவர் விவரிக்கிறார்.
ஆனால் பெண்ணுறுப்பில் வறட்சியோ, உடலுறவு கொள்வதில் ஆசை குறைவதோ மட்டும் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதற்குக் காரணமாக இருப்பதில்லை..
''ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும், அதன் பிறகு மிகவும் வலி மிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உடலுறவு கொள்வதில் எனக்கு சுத்தமாக ஆசை இல்லை. இந்தப் பிரச்னை மெனோபாஸுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கண்டறியவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதன் விளைவாக சிறுநீர்ப் பாதையில் தோற்றுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் ஸெஸே தெரிவிக்கிறார்.
"ஈஸ்ட்ரோஜன் வெறும் மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த ஒன்று என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்ட்ரோஜன் என்பது நமது உடல் முழுவதும் செயல்படும் ஓர் அற்புதமான ஹார்மோன்".
"பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் குழாயை வழுவழுப்புத் தன்மையுடன் வைத்திருக்க உதவுவது ஈஸ்ட்ரோஜன்தான். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது , சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள திசுக்களை மெல்லியதாகவும், வறண்டதாகவும் மாற்றி நோய்தொற்றுக்கு ஆளாக்குகிறது" என்று அவர் விவரிக்கிறார்.
பல கலாசாரங்களில் பெண்கள் உடலுறவு கொள்வது என்பது இனப்பெருக்கத்தோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலுறவு கொள்வது நின்றுவிடும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது.
பெண்களின் இளமைக்காக அவர்களை மதிப்பது என்பது அவர்கள் வாழ்வின் இந்தக் காலகட்டத்தைக் கடினமாக்கிவிடும் என்று கூறும் மருத்துவர் மாலி, "சில பெண்களுக்கு இது கஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கலாம்" என்கிறார்.
ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு தங்கள் வாழ்க்கையின் சிறந்த உடலுறவை வைத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
"மெனோபாஸ் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. பெண்கள் உடலுறவு கொள்ளவும், கூடுதல் இன்பத்தை அனுபவிக்கவும் பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத தீர்வுகள் இருக்கின்றன" என்று மருத்துவர் மாலி கூறுகிறார்.
லண்டனில் வசிக்கும் ஹால்டிடாவுக்கு 65 வயதாகிறது. அவரது மெனோபாஸ் காலகட்டத்தை ஒட்டி அவருக்கு விவாகரத்து ஆனதால், அதன் பிறகுதான் அவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக மாறத் தொடங்கியது.
"எனக்கு 43 வயதானபோது எனக்கு விவாகரத்தானது. எனது 45-46 வயதில் பெரிமெனோபாஸ் காலகட்டம் தொடங்கியது. அதன் பிறகுதான் நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளத் தொடங்கினேன். நான் சந்தோஷமாக உணர்ந்தேன். ஒருவழியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டுவதற்கான வழிமுறையைப் பற்றிப் பேசும் மருத்துவர் மாலி, "உடலுறவு குறித்த உங்களது எண்ணத்தை மறுமதிப்பீடு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.
"நம் எல்லாருக்குமே உடலுறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான உடலுறவு எப்படி இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கும். ஆனால் நம் உடலில் மாற்றம் ஏற்படும்போது, அதற்குத் தகுந்தாற்போல் நமது எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உடலுறவு என்றால் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?" என்று அவர் கூறுகிறார்.
ஃபோர்ப்ளே மற்றும் ஆணுறுப்பை உள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளாமல் பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் வழிகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார்.
"பெண்ணுறுப்பின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் உணர்திறன் குறையலாம். அதனால் வைப்ரேட்டர் போன்ற பாலியல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றால், "மருத்துவ உதவியை நாடுங்கள், தேவைப்பட்டால் மருத்துவரை மாற்றுங்கள், மனம் தளரவேண்டாம், இதைக் கண்டு கூச்சமடையவும் வேண்டாம்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே கூறுகிறார்.
"ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) முதலில் வழங்கப்படும். அவை மாத்திரைகள், ஜெல், ஒட்டக்கூடிய பேட்ச்கள் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. சிலரால் ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை கலக்கும் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சிலருக்கு பெண்ணுறுப்பில் நேரடியாக பூசிப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளும் இருக்கின்றன" என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.
"எனது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த எனக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வேண்டும் என்று கேட்டபோது பெண்ணுறுப்பில் பூசும் க்ரீம் எனக்குத் தரப்பட்டது. எனக்கு மிக மோசமான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் எனது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என்கிறார் அவர்.
கடைகளில் கிடைக்கும் லூப்ரிக்கன்ட்கள் மற்றும் பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் மாய்ஷரைஸர்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஸெஸே.
இடுப்பு தசைகளில் (pelvic muscles) வலு குறைந்தவர்கள் அதற்காக இருக்கும் ஃபிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் மாதவிடாய் நின்றாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, புகை பிடிக்காமல் இருப்பது, உடல் எடையைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.
"நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை கொள்வது சுயநலமான விஷயமல்ல. உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒரு சூப்பர்வுமன் என்று நினைத்துக்கொண்டு பல விஷயங்களை நம்மீது போட்டுக்கொள்கிறோம். உதவி கேட்பதில்லை என்பதே முக்கியப் பிரச்னை. உதவி கேளுங்கள். உதவி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறொருவர் தாமாக உதவி செய்ய முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே தெரிவிக்கிறார்.