உக்ரைன் மீதான போருக்கு நடுவே தற்போது ரஷ்யாவின் அடுத்த போர் நடவடிக்கை பற்றிய திடுக்கிடும் தகவலை டென்மார்க் உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா விரைவில் 2 ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க தேவையான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2 ஐரோப்பிய நாடுகள் எவை? அந்த 2 நாடுகள் மீது எப்போது ரஷ்யா போர் தொடுக்க உள்ளது? போர் தொடுப்பதன் நோக்கம் என்ன? என்பது பற்றிய முழு விபரங்களை இங்கே பார்க்கலாம். இப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வந்த நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காசாவின் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 90 நாட்கள் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் போன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். விரைவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டென்மார்க் உளவுத்துறை வார்னிங் இதற்கிடையேதான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உக்ரைன் மீதான போர் நிறுத்தத்துக்கு பிறகு ரஷ்யா சார்பில் ஐரோப்பிய நாடுகள் மீது போரை தொடங்க திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார்னிங்கை வெளியிட்டு இருக்கும் நாடு டென்மார்க். இதுதொடர்பாக டென்மார்க்கின் ராணுவ உளவுத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2 ஐரோப்பிய நாடுகள் குறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து போரை தொடங்க திட்டமிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஐரோப்பிய நாடுகள் மீது அவர் போர் நடவடிக்கையை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நடவடிக்கைக்கான சரியான காலக்கட்டத்தை ரஷ்யா எதிர்பார்த்து காத்துள்ளது. உக்ரைன் மீது தற்போது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த வேளையில் பிற நாடுகள் மீது கவனம் செலுத்த முடியாத நிலையில் ரஷ்யா உள்ளது.
இதனால் உக்ரைன் போரை முடித்துவிட்டு அடுத்தக்கட்டமாக ஐரோப்பாவை குறிவைத்து ரஷ்யா போரை தொடங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நேட்டோ படைகளின் பலம் குறையும்போது ரஷ்யா நிச்சயமாக ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகள் இதுதொடர்பாக பிரிட்டிஷ் மீடியாவான ‛தி சன்' சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
‛‛ரஷ்யா தனது அண்டை நாடுகளாக உள்ளன ஜார்ஜியா மற்றும் மால்டோவா மீது போர் நடவடிக்கையை தொடங்கலாம். உக்ரை் போர் முடிவடைந்த பிறகு இந்த 2 நாடுகள் ரஷ்யாவால் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஜார்ஜியா நேரடியாக ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆனால் மால்டோவா நேரடியாக ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக கடல்வழி மார்க்கம் அல்லது உக்ரைன் வழியாக மால்டோவை ரஷ்யாவால் தாக்க முடியும்.
இந்த 2 நாடுகளும் நேட்டோ படையில் இல்லை. இருப்பினும் கூட அந்த நாடுகளை சுற்றிய பிற ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைகளில் உள்ளன. குறிப்பாக ரோமானியா உள்ளிட்ட நாடுகள் நேட்டோவில் உள்ளன. இதனால் ஒருவேளை இப்போது ஜார்ஜியா, மால்டோ மீது போர் தொடங்கினால் பிற ஐரோப்பிய அண்டை நாடுகள் இருநாடுகளுக்கும் உதவி செய்யலாம். நேட்டோ படை பலமும் கைக்கொடுக்கலாம். இது ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் ரஷ்யா நேட்டோவின் பலம் குறையும் சமயத்தை எதிர் பார்த்து காத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேட்டோ பலம் குறையுமா?
நேட்டோ என்பது (NATO)என்பதன் விரிவாக்கம் North Atlantic Treaty Organization. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பாகும். இந்த அமைப்பில் ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவை சேர்ந்த மொத்தம் 32 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பு என்பது ஒரு ராணுவ கூட்டமைப்பாகும். நேட்டோவில் அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், துருக்கி, பிரிட்டன் உள்பட மொத்தம் 32 நாட்டு ராணுவ வீரர்களும் இருப்பார்கள். இந்த கூட்டமைப்பில் செயல்படும் ஒரு நாடு மீது பிற நாடு தாக்குதல் நடத்தினால் உடனடியாக நேட்டோ நாடுகள் உதவிக்கு செல்லும். Advertisement உக்ரைனும் நேட்டோவில் சேர ஈடுபாடு காட்டியது. ரஷ்யாவின் மிரட்டலுக்கு பயந்து உக்ரைன் நேட்டோவில் சேர துடித்தது. இதனை ரஷ்யா விரும்பாததால் தான் இருநாடுகள் இடையே போர் உருவானது. தற்போது நேட்டோ நாடுகள் இடையே பிரச்சனை என்பது ஏற்பட்டுள்ளது. நேட்டோ அமைப்புக்கு அமெரிக்கா தான் அதிக நிதியை வழங்கி வருகிறது.
பிற நாடுகள் குறைவாக தான் பங்களிப்பு செய்கின்றன. இதனால் தான் அமெரிக்கா சார்பில் நேட்டோவில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில் அந்த அமைப்பு பலம் குறையும். இந்த சந்தர்ப்பத்தை நோக்கி தான் தற்போது ரஷ்யா காத்துள்ளது. நேட்டோ படையில் குழப்பம் ஏற்பட்டு அமெரிக்கா விலகும் பட்சத்தில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது போரை தொடங்கும் என்று டென்மார்க் உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.