நண்பர்களுடன் மகிழ்ச்சியாக, விருந்துகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சென்று சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அவர்.
ஆனால், அதெல்லாம் அவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு வரைதான்.
அவருக்கு என்ன ஆயிற்று என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், இன்னும் நான்கு வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாக மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.
அந்தத் தகவல் அவரை இருட்டுக்குள் தள்ளியது போல் ஆக்கிவிட்டது.
அதற்கு காரணம், "ஒருவர் உங்களிடம் வந்து உங்களது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுக்கு, இன்னும் நான்கு வாரம் மட்டுமே இருக்கிறது என்று கூறுவது எப்படி இருக்கும்?"
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு, கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு தவானாவிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவர் மருத்துவர்களின் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். அவர் கருவுற்றிருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக(negative) வந்தபோது, தவனா தான் நினைத்தது சரி என்று மேலும் உறுதியாக நம்பினார்.
ஆனால் நர்ஸ் ஒருவரோ தவனா கர்ப்பமாக இருக்க கூடும் என்று உறுதியாக சந்தேகிக்க, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து பார்க்க மருத்துவரிடம் வலியுறுத்தினார்.
ரிவரின் தந்தை இம்மானுவலிடம், முதலில் தான் குழந்தை பெற்றெடுக்க போவதை தவனா கூறிய போது, அதை அவர் முதலில் நம்பவே இல்லை.
கர்ப்பமானதே தெரியாமல் குழந்தை பிரசவிக்கும் பெண்கள்? எப்படி சாத்தியம்?
வாந்தியெடுத்தல் அல்லது கவனிக்கத்தக்க அளவுக்கு வயிறு பெருத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுப்பது கிரிப்டிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவர் கர்ப்பமடைதல்.
இது அரிதானதே, ஆனாலும் "கறுப்பின சமூகத்தில் இது மிகவும் பொதுவானது" என்று மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தவானா கூறுகிறார்.
"நமது இடுப்பு மற்றும் எலும்பு அமைப்பு காரணமாக இப்படி நிகழ்வதாக என்னிடம் கூறப்பட்டது. குழந்தை வெளிப்புறமாக வளராமல், உள்நோக்கி வளர்கிறது. இதனால் பிரீச் நிலை எனப்படும் தலைகீழ் பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது," என்று அவர் கூறுகிறார்.
இந்த புதிரான கர்ப்பம் பற்றிய தரவு உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், லண்டன் சவுத் பேங்க் பல்கலைக் கழகத்தின் சுகாதாரப் பேராசிரியரான அலிசன் லியரி, "பெண்கள், குறிப்பாக கறுப்பினப் பெண்கள், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் அடிப்படையில் மோசமான விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் காட்டும் நிறைய ஆய்வுகள் உள்ளன," என்று அவர் பிபிசி நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார்.
"இது சிறிய அளவிலான மக்களைப் பாதித்தாலும் இது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். ஏனெனில் நல்ல மகப்பேறு பராமரிப்பு, முறையான பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு ஆகியவை முன்கூட்டியே உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மோசமான விளைவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்." என்று அவர் கூறினார்.
குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நான்கு வாரங்கள் மற்றும் நான்கு நாட்கள் சென்ற பின், தனது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தையை பெற்றெடுத்தார் தவானா.
பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுடன் தான் போராடியதாகவும், இளம் தாயாக மாறுவதற்கான ஆலோசனையைப் பெற டிக்டாக்கைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணைத் தவிர, இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட வேறு யாரையும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார் அவர்.
"எனக்கு எந்த அறிவுரையும் வழங்க யாரும் இல்லாததால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இது எப்படிப்பட்டது என்று யாருமே பேசவில்லை. பின்னர் நான் ஒரு வீடியோவைப் கண்டுபிடித்தேன். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இதைப் பற்றி பேசி வீடியோ ஒன்றை போட்டிருந்தார். அதை 100 பேர் பார்த்திருந்தனர்.அவர்தான் உண்மையிலேயே எனக்கு இதுகுறித்து ஆலோசனை கூறிய ஒரே ஒரு நபர்" என்று தவானா கூறினார்.
இதற்கு பின்னர் தனது தனிப்பட்ட அனுபவத்தை தவானா வீடியோ மூலம் இணையத்தில் பகிர்ந்தார். இன்று வரை அது 400,000 லைக்குகளை பெற்றுள்ளது.
தனது கதையை பகிர்வதன் மூலம், கடைசி நேரத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை தெரிந்து கொள்ளும் இளம் தாய்மார்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்புவதாக கூறுகிறார் தவானா.
என்னதான் தனது தாயிடம் இருந்து தவானாவுக்கு பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தாலும், எல்லா இளம் தாய்மார்களுக்கும் அந்த வசதி இருக்காது என்று அவருக்கு தெரியும்.
கிரிப்டிக் கர்ப்பம் என்றால் என்ன?
இந்த வார்த்தை தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரியாமலே கர்ப்பமாக இருக்கும் பெண்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இதில் சில பெண்களுக்கு பிரசவத்திற்கு போகும் வரை தாங்கள் கர்ப்பமாக இருப்பதே தெரியாது.
2,500 பிரசவங்களில் ஒன்று இப்படியானதாக இருக்கிறது.
இது பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு சுமார் 300 பிறப்புகளுக்கு சமம்.
சில பெண்கள் கர்ப்பத்தின் அறிகுறிகளை பெறாமல் இருப்பது, மன அழுத்தத்தோடு தொடர்புடையது.
ஒழுங்கற்ற அல்லது மாதவிடாய் ஏற்படாத பெண்கள் கூட, ஒரு சில கர்ப்பத்திற்கான அறிகுறிகளை பெறுகிறார்கள்.
ஆதாரம்: ஹெலன் செய்ன், மருத்துவ பேராசிரியர் ஸ்டிர்லிங் பல்கலைக் கழகம்.