இவர், மத்திய காஸாவில் ஹமாஸ் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்டு, இஸ்ரேல் சிறப்புப் படைகளால் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8-ஆம் தேதி) ஆச்சரியகரமான வகையில் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளுள் ஒருவரான அந்த்ரேய்-இன் தந்தை.
இஸ்ரேல் ராணுவத்தால் 'ஆபரேஷன் டைமண்ட்' என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ரஷ்ய இஸ்ரேலியரான அண்ட்ரே-யின் பெற்றோரை பொறுத்தவரை ஓர் 'அதிசயத்திற்குக்' குறைவானதல்ல.
தங்களுடைய மகன் மீட்கப்பட்டது எப்படி என்ற செய்தியையும், கடந்த எட்டு மாதங்களாக அவர் அனுபவித்த சோதனைகள் குறித்தும் யூஜினியா மற்றும் மைக்கேல் கஸ்லோஃப் இருவரும் உணர்வுபூர்வமாக பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.
இஸ்ரேல் ராணுவத்தால் வெளியிடப்பட்ட, உடலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில், 27 வயதான அந்த்ரேய்-உம் மற்றொரு பணயக்கைதியும் பயத்துடன் தங்கள் கைகளை பற்றிக்கொண்டு, மெத்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தபோது, சிறப்புப் படையினர் அந்த அறைக்குள் புகுந்து அவர்களை மீட்டனர்.
பல மாதங்களாக தங்களைப் பிடித்து வைத்திருந்தவர்களால் அவர்கள் மூளைசலவை செய்யப்பட்டிருந்ததால், இந்த நடவடிக்கை 'தங்களை கொல்வதற்காகவா அல்லது காப்பாற்றுவதற்காகவா' என்பது பணயக்கைதிகளுக்குத் தெரியவில்லை என, யூஜினியா தெரிவிக்கிறார்.
படக்குறிப்பு,கடந்த வார இறுதியில் மத்திய காஸாஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளில் அந்த்ரேய்-உம் ஒருவர்
அவர்களிடம், பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் மக்கள் மறந்துவிட்டதாகவும் அவர்களை ஒரு பிரச்னயாக இஸ்ரேல் அதிகாரிகள் பார்ப்பதாகவும் அதனால் அவர்களின் இடத்தைக் கண்டறிந்தால் அவர்களை அழிக்க அவர்கள் இலக்கு வைக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
“ஹீப்ரு மொழியில் அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைக் கேட்பதற்காக, ஆளில்லா உளவு விமானம் உள்ளதாகவும்,” அதனால் அவர்களை கிசுகிசுத்த குரல்களில் பேசுமாறு தன் மகன் உள்ளிட்ட பணயக்கைதிகளிடம் அங்கு காவலுக்கு இருந்தவர்கள் கூறியதாகவும் மைக்கேல் கஸ்லோஃப் தெரிவித்தார்.
“இதனால் எங்கள் மகனுக்கு தீவிரமான உளவியல் அதிர்ச்சி ஏற்பட்டு, அவர்களின் வார்த்தைகளை நம்பும் அளவுக்குச் சென்றது,” என அவர் கூறுகிறார்.
“தன்னைக் காப்பாற்றிவிட்டார்கள் என உணரும் வரை அவன் குழப்பமான மனநிலையில் இருந்தான்,” என்கிறார் அவர்.
காஸாவின் நியூசிராட் முகாமிலிருந்து மீட்கப்பட்ட அந்த்ரேய், நோவா அர்கமானி, அல்மோக் மீர் ஜன், மற்றும் ஷ்லோமி ஜிவ் நால்வரும், கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நோவா இசை நிகழ்ச்சியிலிருந்து கடத்தப்பட்டனர். அண்ட்ரே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தார். ரஷ்யாவில் இருந்து இஸ்ரேலுக்கு 18 மாதங்களுக்கு முன் தான் சென்றார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசிக்கும் யூஜினியா, பணயக்கைதிகளின் குடும்பத்தினரின் பேரணிகளில் கலந்துகொள்ளவும் அரசியல் தலைவர்கள், ராணுவ பிரதிநிதிகளை சந்திக்கவும் தொடர்ச்சியாக இஸ்ரேல் வருவார். டெல் அவிவ் நகருக்கு யூஜினியா திரும்பிச் செல்லவிருந்த போது தான், இஸ்ரேல் அதிகாரிகள் அவருடைய மகன் குறித்த செய்தியுடன் அவரை தொடர்புகொண்டனர்.
“அது கெட்ட செய்தியாக இருக்கும் என நினைத்து ‘இல்லை!’ என நான் கத்தினேன். என் மொபைல் போனை தூக்கி எறிந்தேன். அது எங்கோ ஒரு மேசையின் கீழே போய் விழுந்தது,” என அவர் நினைவுகூர்ந்தார்.
“மேசையின் கீழே போனிலிருந்து அவர்கள், ‘நல்ல செய்தி இருக்கிறது!’ என கூறியதை என்னால் கேட்க முடிந்தது,” என்கிறார் அவர்.
“நான் மேசையின் கீழே தவழ்ந்துகொண்டே, ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்,” என்கிறார்.
“மிகவும் நல்ல செய்தி: 'அந்த்ரேய் மீட்கப்பட்டார்'. என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு நன்றாக இருக்காது. அவர்களை திரும்ப கூறுமாறு சொன்னேன்,” என்கிறார் அவர்.
கண்டுபிடித்த தருணம் குறித்து உடலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகின
முதலில், வீடியோ அழைப்பில் அந்த்ரேய்-ஐ மைக்கேல்-யூஜினியா இருவரும் பார்த்தபோது, தன் மகன் எப்படி இருப்பாரோ என கவலை கொண்டிருந்தனர், ஆனால் அண்ட்ரே அப்படியே இருந்ததைக் கண்டு நிம்மதி அடைந்தனர்.
“அவன் சிரித்தன், ஜோக் அடித்தான். காஸாவில் இருந்து திரும்பிய வெறும் மூன்று மணிநேரங்களிலேயே, அவனால் ஜோக் அடித்தான் முடிந்தது,” என்கிறார் அவரின் தாய்.
“அவன் சிறையில் இருந்தான், ஒரு கைதியாக இருந்தான். ஆனால், சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் பிரதேசத்தில் அவனால் வழக்கத்திற்கு திரும்ப முடிந்தது,” என்கிறார் யூஜினியா.
தான் மீட்கப்பட்ட சூழல் குறித்து தன்னுடைய மகன் என்ன கூறினார் என்பது குறித்த விவரங்களுக்குள் அவர்கள் இருவரும் செல்லவில்லை. நியூசிராட் அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மூன்று பணயக்கைதிகளை மீட்ட பின்னர், ஹமாஸ் பாதுகாப்பு குழுவினருடன் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
பின்னர், பணயக்கைதிகளும் படுகாயமடைந்த சிறப்புப் படையினரும் லாரி மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் ஆயுததாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். பணயக்கைதிகள் தப்பிப்பதற்கு போதிய நேரம் மற்றும் மற்றும் அவர்களை பாதுகாப்பதற்காகவே இஸ்ரேல் விமானப்படை தீவிர குண்டுவீச்சில் ஈடுபட்டதாக தெரிகிறது.
போர் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான நிகழ்வு இது எனக்கூறியுள்ள காஸா சுகாதார அதிகாரிகள், 270-க்கும் அதிகமான பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
100-க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. பணயக்கைதிகளை அதிக மக்கள் வாழும் இடத்தில் மறைத்து வைத்திருந்ததால், பொதுமக்களின் உயிரிழப்புக்கு ஹமாஸ் தான் பொறுப்பு என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
“இரண்டு மாதங்கள் அவனுடைய கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது,” என அந்த்ரேய்-இன் தாய் படபடக்கும் குரலில் கூறினார். 'ஒரு விலங்கு போல' சாப்பிடுவதை வெறுத்த அந்த்ரேய், தன் கைகளைப் பின்னால் இருந்து வளைத்து முன்னே கொண்டு வர முயற்சித்துள்ளார்.
“காஸாவில் அவனுடைய கைகள் முன்பகுதியில் கட்டப்பட்ட போது அதனை ஒரு பரிசாகக் கருதினான்,” என அவருடைய தந்தை கூறுகிறார்.
பணயக்கைதிகளை சிறைபிடித்தவர்கள் அவர்களை, “அவமானப்படுத்தி, அடித்ததாக”, கூறும் மைக்கேல், அவர்கள் செய்த கொடூரமான கேலிதான் மிக மோசமானது என்று தெரிவித்தார்.
“பணயக்கைதிகள் எப்போதும் உளவியல் அழுத்தத்துடனேயே இருந்திருக்கின்றனர். ‘உன் அம்மா கிரீஸுக்கு விடுமுறையை கழிக்கச் சென்றுவிட்டார். எங்களுக்குத் தெரியும். நாங்கள் பார்த்தோம். உன் மனைவி வேறு ஒருவரை 'டேட்' செய்கிறார்,” என அவர்கள் கூறியதாக யூஜினியா கூறுகிறார்.
“தங்கள் கார்களில் இருந்து இறங்கி மக்கள் அந்த்ரேய்-ஐ வாழ்த்துகின்றனர். நான்கு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் முழுவதும் நடைபெறும் கொண்டாட்டம் குறித்த செய்திகளை பார்த்து திகைக்கிறேன்,” என்கிறார் யூஜினியா.
எட்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 1,200 பேரைக் கொன்ற ஹமாஸின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் இன்னும் தடுமாற்றத்துடன் உள்ளது. பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 240 பேரில் 100-க்கும் அதிகமானோர் நவம்பர் மாதத்தில் ஒருவார கால தற்காலிக சண்டை நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்டனர். அந்நாளில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இன்னும் 116 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்களுள் மூன்றில் ஒருபகுதி பணயக்கைதிகள் உயிருடன் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜூன் 8-ஆம் தேதி பணயக்கைதிகள் மீட்கப்படுவதற்கு முன்னர், மூன்று பணயக்கைதிகள் மட்டுமே தரைப்படை தாக்குதலால் விடுவிக்கப்பட்டனர். சமீபத்திய ராணுவ நடவடிக்கை இஸ்ரேலுக்கு ஒரு உந்துசக்தியை அளித்துள்ளது.
பணயக்கைதிகளின் உறவினர்கள் பலரைச் சந்தித்துள்ள யூஜினியா, தன்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறார். டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலில் அந்த்ரேய்-இன் இல்லத்திற்கு அருகில், இன்னும் காணாமல் போன பலரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
“அந்தப் படங்களைக் காண்பதற்கு வருத்தமாக இருக்கிறது,” என்கிறார் யூஜினியா. “அவர்களின் முகங்களை காணும்போது எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஏனெனில், நாங்கள் (குடும்பத்தினரை) ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டுள்ளோம், இதுவொரு அதிசயம் என தினமும் பலமுறை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம்!” என்கிறார் அவர்.
தன் மகன் பட்ட துன்பங்களை தாண்டியும், பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் நிலத்தடி சுரங்கங்களில் வெளிச்சமின்றி இருட்டில் அடைத்து வைக்கப்பட்டதை விடச் சிறந்த சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டதாக தன் மகனிடம் அங்கிருந்த பாதுகாவலர்கள் கூறியதை இருவரும் நம்ப முனைகின்றனர்.
“அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை நிச்சயம் காப்பாற்ற வேண்டும்,” என மைக்கேல் அழுத்தமாக கூறுகிறார்.
பணயக்கைதிகளை மீட்பதற்கான பிரசாரத்தைக் கைவிடாத அவர்கள் இருவரும், மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அந்த்ரேய் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்காக உதவுவதில் தங்கள் சக்தியை செலுத்துகின்றனர்.
சிறைபிடிக்கப்பட்டு 245 நாட்களுக்குப் பின் நடந்த எல்லாவற்றையும் குறித்து, பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் அரசாங்கத்தை வலியுறுத்திய பேரணிகள் குறித்தும் அறிந்துவருகிறார் அந்த்ரேய்.
“பல விஷயங்கள் குறித்து அவர் ஆச்சர்யப்படுகிறார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் சில அவரை தூங்கவிடாமல் செய்கின்றன,” என அவரின் தாய் கூறுகிறார்.
“சில கட்டுரைகளையும் அவர் படித்துவிட்டு, “இது உண்மையா? இது உண்மையா? இப்படி நடந்ததா?” என கேட்கிறார்.