ஜெர்மனி மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து, 4 நோயாளிகள் உயிரிழந்த சோகம்!
06 Jan,2024
ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டின் ஹேம்பெர்க் நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள யூல்ஜென் என்ற நகரில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 4வது மாடியில் இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் 4வது மாடி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பிற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதனிடையே தீவிபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 3 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியாத நிலையில், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.