15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள்
08 Jul,2022
இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் 15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்க உள்ளன. ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் - துருக்கி இடையேயான விமான சேவையில் பல ஆண்டுகளாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் உள்ளது. துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ்அஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டின் எந்த விமான நிறுவனமும் துருக்கிக்கு விமான சேவையை மேற்கொள்வதில்லை
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்காக ஏற்படும் அதிகபட்ச செலவு காரணமாகவும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை மேற்கொள்வதை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் - துருக்கி இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹர்சொஹ் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு துருக்கி அதிபர் எர்டோகனை இஸ்ரேலிய அதிபர் ஐசக் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்தனர். இந்த சந்திப்புகள் மற்றும் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளன. இன்னும் சில நாட்களில் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.