அடுத்த தலைவலி - குழந்தைகளின் கல்லீரலை குறிவைக்கும் மர்ம நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
18 Apr,2022
கொரோனா பெருந்தொற்று குழந்தைகளை உடலளவிலும். மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்லீரலை பாதிக்கும் மர்ம நோய் பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மர்ம நோயினால், பிரிட்டனில் 74 குழந்தைகளும், அமெரிக்காவில் 9 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், 6 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற கல்லீரல் வீக்க பாதிப்பை ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, இ ஆகிய வைரஸ்கள் ஏற்படுத்தும். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த வைரஸ்களின் தாக்கம் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 1 முதல் 6 வயதுடைய குழந்தைகள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இந்த நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, நோய் பாதிப்புக்கான காரணிகள் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று என உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை ஆகியவை பொது அறிகுறியாக உள்ளது. குழந்தைகளின் கண்கள், தோலில் மஞ்சள் நிறம் கானப்பட்டால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், சிறுநீரின் நிறம் மாறுதல், தோல் அரிப்பு, தசைவலி, பசியின்மை போன்ற புறம்தள்ளக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.
வைரசை கட்டுப்படுத்த, நன்றாக கைகளை கழுவ வேண்டும் என்றும், சுத்தமாக இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.