NeoCov: புதிய கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்.
30 Jan,2022
.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கோவிட்-19 தொற்றுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில், வௌவால்களில் காணப்படும் நியோகோவ் (NeoCov) என்ற கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வௌவால்கள் மத்தியில் பரவும் ஒரு வகை கொரோனா வைரஸ் நியோகோவ்.
இந்த வகை கொரோனோ வைரஸ் மேலும் பிறழ்வடைந்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகமே தற்போதைய கோவிட்-19 தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் NeoCoV என்ற புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸ் அதிக தொற்று விகிதத்துடன் மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த புதிய கோவிட் வேரியன்ட்டான 'நியோகோவ்' அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளார்கள். இருப்பினும், NeoCov முற்றிலும் புதியது அல்ல. ஏனெனில் இது MERS-CoV வைரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் பாதிப்புகள் மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முதன்முதலில் அடையாளம் வைரஸ் நோயான MERS உடன் இந்த புதிய NeoCov நெருங்கிய தொடர்புடையது என்பதை வேறொரு ஆய்வு சுட்டி காட்டுகிறது. பொதுவாக கொரோனா வைரஸ்கள் என்பது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி வரையிலான கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாக இருந்து வருகின்றன.
சீன அறிவியல் அகாடமி மற்றும் வூஹான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களிடம் அதிகம் பரவி காணப்படுவதாகவும், தற்போது வரை இது வெளவால்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். வெளவால்களிடம் பரவி வரும் NeoCov அதன் தற்போதைய வடிவத்தில் மனிதர்களைப் பாதிக்காது. ஆனாலும் இந்த வைரஸ் மேலும் மேலும் பிறழ்வுகளை எதிர் கொண்டால் நிச்சயம் ஒருகட்டத்தில் மனிதர்ளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் எதிர்பாராதவிதமாக NeoCoV மற்றும் அதன் நெருங்கிய உறவினரான PDF-2180-CoV ஆகியவை ACE2-ஐ திறம்பட பயன்படுத்தி மனிதர்களை பாதிக்க முடியும் என்பதை கண்டறிந்தோம். ACE2 என்பது உயிரணுக்களில் உள்ள ஒரு ஏற்பி புரதமாகும். இது கொரோனா வைரஸின் நுழைவுப் புள்ளியை வழங்குகிறது மற்றும் பரவலாக செல்களை பாதிக்கிறது. மெர்ஸ் தொடர்பான வைரஸ்களில் ACE2 பயன்பாட்டின் முதல் நிகழ்வை எங்கள் ஆய்வு நிரூபிக்கிறது. SARS-CoV-2 அல்லது MERS-CoV-ஐ இலக்காகக் கொண்ட ஆன்டிபாடிகளால் NeoCov உடனான தொற்றுநோயை க்ராஸ்-நியூட்ரலைஸ்டு செய்ய முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனிடையே மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டு உள்ள NeoCov குறித்து தற்போதைக்கு கவலை மற்றும் அச்சம் கொள்ள தேவை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்பதை வலுவாக உறுதி செய்ய இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டிஇருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.