பாசிப்பருப்பு அல்வா
25 Jan,2022
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 20
ரவை - ஒரு ஸ்பூன்
கடலை மாவு - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் 100 கிராம் அளவுள்ள ஒரு கப் பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை தண்ணீரை மாற்றி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு வடிகட்டியில் ஊற்றி தண்ணீரை வடித்து விட்டு பாசிப்பருப்பை சிறிது நேரம் ஆற விடவேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவேண்டும். பாசிப்பருப்பு நன்றாக வறுபட்டதும் அதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்பு அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு பொடி செய்து வைத்துள்ள பாசிப்பருப்பினை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
நெய் முழுவதுமாக பாசிப்பருப்புடன் கலந்துவிடும் வரையில் இரண்டையும் நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். மாவு கட்டி படாமல் அடுப்பை சிறு தீயில் வைத்து கலந்து கொண்டு செய்யவேண்டும்.
சிறிது நேரத்தில் பாசிப்பருப்பு மாவு நன்றாக வெந்தவுடன் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து கலந்து விடவேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் இடையிடையே சிறிது சிறிதாக நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அவ்வளவு தான். சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.