கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்; ஆன்மிக தகவல்கள்!
15 Jul,2019
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி அரை மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும். கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.