`சாதுவாக இருக்கிறோம் சில உயிர்களுக்கு பலம். சில உயிர்களுக்கு பலவீனம்”
28 Dec,2018
“நூறு பேர் சேர்ந்து இருந்தாலும் வாழ்க்கை முழுதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும், எங்கேயும் நின்று நிதானமாக யோசிக்க முடியாது, கொஞ்சம் அசந்தாலும் சுத்தி இருக்க எவனாவது ஒருத்தன் தூக்கிடுவான்”
- மேலே சொல்லப்பட்டது வெறும் வாக்கியம் மட்டுமல்ல; ஒரு உயிரினத்தின் (காட்டு மான் – wildebeest) வாழ்க்கை”
பிழைத்திருக்க வேண்டுமானால் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற இயற்கையின் விதிக்குள் சிக்கிக்கொண்ட உயிரினங்களில் முக்கியமான உயிர் காட்டுமான்.
பார்ப்பதற்கு மாடுகள் போல தெரியும். ஆனால், இவை மான் இனத்தைச் சேர்ந்தவை. தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் செரங்கட்டி என்கிற தேசியப் பூங்கா உள்ளது.
யானை, சிங்கம், சிறுத்தை, மான்கள், கழுதைப்புலி எனப் பல விலங்குகள் இங்கு வாழ்கின்றன. இந்தச் செரங்கட்டியிலிருந்து கென்யாவின் மசாய் மாரா தேசியப் பூங்கா இருக்கிற இடத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விலங்குகள் பிழைப்புக்காக இடம் பெயர்கின்றன.
இந்த நெடும்பயணத்தில் 13 லட்சம் எருமை மாடுகள், 5 லட்சம் தாம்சன் மான்கள், 3 லட்சம் காட்டு மான்கள், 2 லட்சம் வரிக்குதிரைகள் உட்பட கிட்டத்தட்ட 25 லட்சம் விலங்குகள் பிரமாண்டமாகப் பயணத்தைத் தொடங்குகின்றன. இதில் குறிப்பிடத்தக்க உயிரினம் காட்டு மான்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் இவை இடப்பெயர்ச்சி பயணத்தைத் தொடங்குகின்றன.
இருப்பதிலேயே பயணம்தான் மிக சுவாரஸ்யமானது, அடுத்து என்ன நிகழும் என்பதே அறியாமல் தொடங்குகிற பயணங்கள், காட்டு மான்களைப் பொறுத்தவரை பயங்கரமானவை.
தங்களுடைய பயணத்தில் அவை குறைந்தபட்சம் 800 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். அந்த 800 கிலோ மீட்டரை கடப்பது என்பது தாவர உண்ணிகளுக்கு தவ காலம்.
பாலைவனம், ஆறுகள், காடுகள் எனப் பரப்புகளை அவை கடக்கிற அந்தக் காலம் அவற்றுக்கு இன்னொரு பேறுகாலம்.
உயிர் போகும் எனத் தெரிந்தும் ஒரு பயணத்தைத் தொடங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை.
ஒரு நாளைக்குப் பல நூறு பேர் இருக்கிற குழுவில் யார் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்கிற நிலையில் இவை இந்தப் பயணத்தைத் தொடங்குகின்றன.
இவை பயணம் செய்கிற வழிகளில் சிங்கம், சிறுத்தை, கழுத்தைப் புலி, முதலை என அனைத்துமே காட்டு மான்களின் வருகைக்குக் காத்திருக்கும்.
நூற்றுக்கணக்கில் இடம்பெயரும் காட்டு மான்கள் இவற்றைத் தாண்டித்தான் பயணிக்க வேண்டும். காட்டு மான்களுக்கு வறட்சிக்காலம் என்றால் சிங்கங்களுக்கும் அது வறட்சிக்காலம்தான்.
நூறு காட்டு மான்கள் இருக்கிற இடத்தில் சிங்கமோ, சிறுத்தையோ இருப்பது தெரிந்தாலே மொத்த மான் கூட்டமும் பீதியாகி ஓட ஆரம்பிக்கும். பயத்தை சாதகமாக்கிக் கொள்கிற சிங்கங்கள் அதில் ஒன்றைப் பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன.
கண்முன்னே இருக்கிற நூற்றில் ஒரு காட்டு மானை தனியே பிரிப்பது சிங்கத்துக்கும், சிறுத்தைக்கும் எளிதான வேலைதான்.
ஏனெனில் காட்டு மான், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 80 கிலோ மீட்டர் வேகம் வரைதான் ஓடக் கூடியது.
ஆனால், அவற்றைத் துரத்தும் சிறுத்தையின் வேகம் மணிக்கு 75 இருந்து 120 கிலோ மீட்டர். ஒவ்வோர் இடப்பெயர்வின் போதும் பல நூறு காட்டுமான்கள் பல விலங்குகளால் கொல்லப்படுகின்றன.
காட்டு மான் கூட்டத்துக்குத் தலைவன் என்பவனெல்லாம் இல்லை. முதலில் யார் செல்கிறார்களோ அவரைப் பின்தொடர்ந்து மற்ற எல்லாக் காட்டு மான்களும் ஓட ஆரம்பிக்கும்.
பல ஆயிரம் பேர் தனக்குப் பின்னால் இருப்பது தெரிந்தால் என்னன்னவோ செய்து விடுகிற மனிதனைப் போல இல்லை காட்டு மான்கள், கூட்டமாக இருந்தாலும் ஓடும், தனியாக இருந்தாலும் ஓடும்.
அதன் இயல்பே ஓடுவதுதான். காட்டு மானின் பலம் காட்டு மானுக்கு நன்கு தெரியும் என்பதால், என்ன நடந்தாலும் நடக்கட்டுமென எதிர்த்து நிற்கிற பழக்கமெல்லாம் அதன் ஜீன்களிலேயே இல்லை.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இதன் இனப்பெருக்கக் காலம் தொடங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் செரங்கெட்டி தேசியப் பூங்காவில் 5,00,000 லட்சம் காட்டு மான் குட்டிகள் பிறக்கின்றன.
பெண் காட்டு மான்கள் பாலூட்டும் பருவத்தின்போது, ஆண் காட்டு மான்கள் தூங்காமல் அவற்றிற்குத் துணையாக இருக்கின்றன. குட்டிகள் மிகவும் பெரியவை.
கன்றுகள் 20 முதல் 22 கிலோ எடையுள்ளதாக இருக்கும். கன்றுகள் பிறந்த ஒரு நிமிடத்துக்குள் நடக்கக் கற்றுக்கொள்கின்றன.
பெண் கன்றுகள் தாயுடன் இருக்கின்றன. ஒரு வயதை அடைந்த ஆண் மான்கள் தனிக் குழுவாக இணைந்துகொள்கின்றன.
ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக இருந்தாலும் இடம்பெயரும் பொழுது ஒன்றிணைந்தே செல்கின்றன.
இரவில் கன்றை ஈன்றால் வேறு மிருகத்துக்குக் காவு கொடுக்க வேண்டி வரும் என்பதால் விடியற்காலையிலோ அல்லது பகல் பொழுதுகளில்தான் கன்றுகளை ஈனும். அப்படியிருந்தும் மான் குட்டிகளை மற்ற விலங்குகள் இரையாக்கிவிடும்.
மற்ற விலங்குகள் தங்களின் குட்டிகளுக்கு எப்படி வேட்டையாட வேண்டுமெனக் கற்றுக் கொடுத்தால், காட்டு மான்கள் தங்களின் குட்டிகளுக்கு எப்படித் தப்பிக்க வேண்டுமென்றுதான் கற்றுக்கொடுக்கும்.
சிங்கம் மற்றும் சிறுத்தைகளின் குட்டிகள் `தொழிலைக் கற்றுக்கொள்ள’ ஆரம்பிப்பதே காட்டு மானின் குட்டிகளிடம்தாம்.
“சாதுவாக இருக்கிறோம் என்பது சில உயிர்களுக்கு பலம். சில உயிர்களுக்கு பலவீனம்”