தமிழகத்தில் கொரோனா பாதித்த முதியோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது
29 Sep,2020
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 614 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,396 ஆண்கள், 2,192 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 5,589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,283 பேரும், கோவையில் 587 பேரும், சேலத்தில் 256 பேரும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 30 பேரும், பெரம்பலூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 534 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 75 ஆயிரத்து 598 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 41 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 70 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக தொற்று அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.