உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எங்கு உருவாகிறது தெரியுமா? விரைவில் திறப்பு
21 Sep,2020
இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும். 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.
‘அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த சுரங்கப் பாதை திறப்பு விழாவிற்கு முழு தயார் நிலையில் உள்ளதாக எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எல்லை சாலை அமைப்பின் தலைமை பொறியாளர் கே.பி. புருஷோத்தமன் கூறியதாவது:-
செப்டம்பர் 25-ந் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுரங்கப்பாதையை திறந்து வைக்கலாம். இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதை பெறலாம். மேலும் கொரோனா நெருக்கடி காரணமாக திறப்பு விழா நேரில் நடைபெறுமா அல்லது காணொலிக் காட்சி வாயிலாக நடக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.