இந்தியாவில் மே மாதத்தில் 64 இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் இருந்திருக்கக்கூடும் –
11 Sep,2020
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 64 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 4 ஆம் திகதிவரை 21 மாநிலங்களில் 28 ஆயிரம் பேரிடம் இரத்த மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்துள்ளது.
இந்த சோதனைகளின் முடிவுகளில் பூச்சியம் புள்ளி ஏழு மூன்று (0.73) விழுக்காட்டினருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஆய்வின்படி பார்த்தால் மே மாதத்தில் நாட்டில் 64 இலட்சத்து 68 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க கூடும் எனவும், தொற்று உறுதி செய்யப்பட்டவர் ஒருவர் என்றால், 82 முதல் 130 பேர் வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படாமல் இருந்திருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.