எக்ஸெல் டிப்ஸ்--வேர்ட் டிப்ஸ்..டேபிள் செல்லில் டெக்ஸ்ட்
27 Sep,2016
எக்ஸெல் – ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT : திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT : ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT :மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
ஒரே டேட்டா – பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
வேர்ட் டிப்ஸ்..டேபிள் செல்லில் டெக்ஸ்ட்:
டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும்
வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, செல்லில் டெக்ஸ்ட் அமைக்கையில், அது தானாக அதனுள்ளாகவே சரி செய்திடும் வகையில் இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி ஒன்று வேர்ட் புரோகிராம் தருகிறது. அதனைப் பார்க்கலாம்.
1. நீங்கள் சற்று மாற்றி அமைக்க வேண்டிய நெட்டு வரிசை அல்லது வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இது நீங்கள் மேலே 1ல் சொல்லப்பட்ட செயலை மேற்கொண்டால் தான் கிடைக்கும்.
3. அடுத்து டேபிள் குரூப்பில் Properties டூல் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Cell டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இனி Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Cell Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. அடுத்து Fit Text என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
7. தொடர்ந்து இருமுறை ஓகே கிளிக் செய்திடவும். முதலில் Cell Options, அடுத்து Table Properties டயலாக் பாக்ஸ் மூடப்படும்.
இங்கு வேர்ட் எப்படி செயல்படுகிறது? செல்லில் உள்ள சொல்லின் எழுத்தளவைக் குறைத்துக் கொண்டு ஏற்கனவே வடிவமைத்த கட்டத்திற்குள்ளாக அமைக்கிறது. வேர்ட் டெக்ஸ்ட்டின் அகலத்தைக் குறைத்துக் கொள்கிறது. இதனை தொழில் நுட்ப ரீதியாக “scrunching” என்று சொல்வார்கள்.
இலக்கண, சொற்பிழை காட்டாதே: வேர்ட் புரோகிராமில், நாம் டெக்ஸ்ட் டைப் செய்திடும்போதே, அதில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்கையில், இதனால், பிழை உள்ள சொற்களின் கீழாக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நெளிவான கோடுகள் காட்டப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது எரிச்சலைத் தரும். மேலும், தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்கையில், அவற்றை ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அநேகமாக, பெரும்பாலான சொற்களில் இந்தக் கோடுகள் காட்டப்படும். எனவே, தமிழில் டைப் செய்து டெக்ஸ்ட் அமைப்பவர்களுக்கு, இந்த கோடுகள் அர்த்தமற்றவையாக இருக்கும். இந்த கோடுகள் காட்டப்படுவதை, வேர்ட் செயலி காட்டாமல் இருக்கும்படி அமைத்திடலாம். அதற்குக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் File டேப்பினை அழுத்தி, பின்னர் Options கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. Mark Grammar Errors As You Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, சொல் மற்றும் இலக்கண பிழைகள் சுட்டிக் காட்டப்பட மாட்டாது