இலங்கைக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் சென்று 200 ஆண்டுகளாகி விட்டாலும் அவர்களின் வாழ்க்கை என்னவோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மேம்படவில்லை.
மலையகத்தின் மாத்தளை பகுதியில் மலையக தமிழர் ஒருவரின் வீடு ஒன்று, தோட்ட நிர்வாகத்தால் உடைக்கப்பட்ட நிகழ்வு அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமான பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
வீட்டை உடைதெறிந்த தோட்ட உதவி முகாமையாளரை கைது செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மலையக தமிழரின் வீடு இடிக்கப்பட்டது ஏன்?
மாத்தளை - எல்கடுவ - ரத்வத்தை பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான மலையக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ரத்வத்தை பகுதியில் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும், இவர்களுக்காக 120 வீடுகள் மாத்திரமே காணப்படுகின்றன. வரிசையாக ஒண்டிக்குடித்தன வீடுகளே இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ரத்வத்தை பகுதியில் உள்ள அத்தகைய வீடு ஒன்றில், நான்கு பிள்ளைகளின் தந்தையான ராமசந்திரனின் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
இவரது அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ள ராமசந்திரன், தனது வரிசை குடியிருப்பிலேயே, பிள்ளைகளின் குடும்பங்களுடனும் வாழ்ந்து வருகின்றார்.
ராமசந்திரனின் குடும்பத்திற்காக தோட்ட நிர்வாகத்தால் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காணியொன்று வழங்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக குறித்த காணியில் அப்போது அவரால் வீடு கட்ட முடியவில்லை.
இதையடுத்து, தன்னிடமிருந்த பணத்தைக் கொண்டு, வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ளும் வகையில் தனது நிலத்தை அவர் தயார்படுத்தியுள்ளார். அவ்வாறு தயார்படுத்தப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தற்காலிகமாக வீடு ஒன்றை அமைக்க ராமசந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரது மகன் குணசீலன் தெரிவித்தார்.
நான்கு புறமும் மரப் பலகை மற்றும் தகரங்களைக் கொண்டு இந்த வீட்டை இவர்கள் அமைத்துக்கொண்டுள்ளனர். வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வீட்டிற்குக் கொண்டு சென்றவர்கள், புது வீட்டிற்குள் செல்லத் தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில், எல்கடுவ தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உதவி முகாமையாளர், வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) வந்து குறித்த வீட்டை உடைக்குமாறு குடும்பத்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த நிலத்தில் முறையற்ற விதத்தில் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, அந்த உதவி முகாமையாளர் இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிய வருகின்றது.
எனினும், தமக்கு தோட்ட நிர்வாகத்தால் இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் ரூபா செலவிட்டு இந்த வீட்டை நிர்மாணித்துள்ளதாகவும் ராமசந்திரன், எல்கடுவ தோட்ட உதவி முகாமையாளருக்கு தெரிவித்துள்ளார்.
இதைப் பொருட்படுத்தாத தோட்ட உதவி முகாமையாளர், ராமசந்திரனின் குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி, குறித்த வீட்டை அவரே உடைத்தெறிந்துள்ளார்.
இவ்வாறு உதவி முகாமையாளரால் வீடு உடைக்கப்பட்ட விதத்தை, ராமசந்திரன் மகன் குணசீலன் தனது செல்போனில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அந்தக் காணொளி ஒரு சில நிமிடங்களிலேயே அதிகளவில் பகிரப்பட்டு, அதிகளவானோர் பார்வையிட்ட நிலையில், இந்த விஷயம் பெரிய பேசுபொருளாக மாறியது.
இலங்கை ஊடகங்கள், சமூக ஊடகப் பதிவுகள் எனப் பல்வேறு வகையிலும் இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
'
இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு எல்கடுவ பகுதியை நோக்கி நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தது.
எல்கடுவ தோட்ட நிர்வாகத்திற்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை அடுத்து, அமைச்சர் தலைமையிலான குழு மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
உடைக்கப்பட்ட வீட்டைப் பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், வீட்டை உடைத்த உதவி முகாமையாளரை அழைத்து வருமாறு தோட்ட நிர்வாகத்திற்குக் கூறினார்.
தோட்ட முகாமையாளரை அமைச்சர் தாக்க முயற்சி
இதன்போது, அங்கு வந்த எல்கடுவ தோட்ட முகாமையாளர் ஒருவர், உதவி முகாமையாளரை அழைத்து வர முடியாது என்ற வகையில் கருத்தைக் கூறி, தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றார்.
இதையடுத்து, கோபமடைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த முகாமையாளரை கடுமையாகப் பேசியதுடன், வாக்குவாதமும் வலுவடைந்தது. இதையடுத்து, முகாமையாளர் மீது தாக்குதல் நடத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் முயன்றார்.
அருகிலிருந்தவர்கள் அமைச்சரை பிடித்துக் கொண்டதுடன், தோட்ட முகாமையாளரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், எல்கடுவ தோட்டத் தலைவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்க எல்கடுவ தோட்டத் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த குடும்பம் வாழும் வரிசை வீடுகளிலுள்ள மேலும் 10 குடும்பங்களுக்கு அதே இடத்தில் தனி வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார்.