உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பொருளாதார சரிவில் இருந்து மீள உலக நாடுகள் திக்கித் திணறி வருகின்றன. ஆனால், கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள ஒரு நாடு மட்டும் ஜாலியாக நிதி பிரச்னை ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த நாட்டைப் பற்றி பார்ப்போமா?
புரூனேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவை போல இதுவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த நாடு தான். புருனே 1888 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1929-ம் ஆண்டு எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, தோண்டும் பணி தொடங்கியது. 1962 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிளர்ச்சி தோல்வி அடைந்து சுல்தான் ஆட்சியே் நிலைத்தது. அதே ஆண்டு புருனே தன்னை தனி நாடாக அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேற அது சுதந்திர நாடாக மாறியது.
1984 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, சுல்தான் ஹசனல் தன்னை நாட்டின் பிரதமராக அறிவித்துக்கொண்டார். நாட்டில் 'மலாய் முஸ்லிம் மன்னராட்சி' சித்தாந்தம் கொண்டு வரப்பட்டு சுல்தான் இஸ்லாத்தின் பாதுகாவலராக முன்வைக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், கிழக்கு ஆசியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடாக புரூனே மாறியது
கிழக்கு ஆசிய பகுதியில் மலேசிய மற்றும் இந்தோனேசியா தீவுகளை தனது எல்லைப்புறமாக கொண்டு 5,765 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புரூனே நாடு அமைந்துள்ளது. 2021 ஆண்டு கணக்கெடுப்பு படி சுமார் 4.45 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் அதன் குடிமக்கள் மீது எந்த கடனும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயமே. வளர்ந்த நாடுகளே கடனில் இருக்கும்போது வளரும் இந்த நாட்டிற்கு கடன் இல்லை.
எப்படி ஒரு நாடு அதன் குடிமக்கள் மீது கடனே இல்லாமல் பார்த்துக் கொள்கிறது என்பது தான் முதன்மையான கேள்வியாக இருக்கும். அதற்கு காரணம் அதன் தேவைகளை எல்லாம் பார்த்துக்கொள்ள தேவையான பணம் அதனிடம் உள்ளது என்பது தான். கடல்புற எல்லையில் உள்ள இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, 90 சதவிகிதம் ஆகும் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸின் பேராசிரியர் உல்ரிக் வால்ஸ் கூறுகிறார்.
சுற்றியுள்ள மற்ற நாடுகளுக்கு எரிவாயு தேவை இருப்பதால் இங்கிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்கிறது. அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதனால் வெளியில் இருந்து கடன் வாங்க தேவை இல்லை. அதற்காக சுத்தமாக கடனே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அது மக்கள் மீது சுமையாக போகும் அளவு இல்லை. அரசின் பேரில் மட்டும் தான் கடன் உள்ளது.
“திறமையான நிதி நிர்வாகம் புரூனே அரசின் முன்னுரிமையாக உள்ளது. இது அந்த நாட்டின் அரசு மற்றும் அதன் குடிமக்கள் மீதான நிதிச்சுமையை கணிசமாக குறைக்கிறது, நாட்டில் வட்டி விகிதங்களும் குறைவாகவே உள்ளன. அதனால்தான் நாட்டு நலப்பணிகளுக்கு பணத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை" என்று மூடிஸின் பொருளாதார நிபுணர் எரிக் சியாங் கூறுகிறார்.
இதனால் அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் வோல்கியா இதன் மக்களுக்கு எந்த வரியையும் சுமத்துவதில்லை. இந்த நாட்டில் கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம்தான். இன்னும் சொல்ல போனால் என்னிடம் எதுவும் இல்லை என்று போய் நிற்பவர்களுக்கு இலவசமாக வீட்டு மனையை வழங்குகிறார்கள். வீடு கட்ட காசில்லை என்றால் வீட்டை கட்டியும் தருகிறார்கள்.
ஆனால் புருனேயில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. உலகம் முழுவதும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்ச காலத்திலேயே கச்சா எண்ணெய் சார்ந்த பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு குறையும். அப்போது இந்த நாட்டின் பொருளாதாரம் என்பது பெரிய அடியை சந்திக்க நேரலாம். ஒட்டுமொத்தப் பொருளாதாரமும், ஒரே ஒரு பொருளை சார்ந்திருப்பது ஆபத்தானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.